பக்கங்கள்

04 செப்டம்பர் 2012

தீவகங்களை கையகப்படுத்தும் சதித்திட்டம்!

வடக்கிலுள்ள நான்கு தீவுகளுக்கு உயிரியல் மின்சாரம் வழங்குவதென்ற போர்வையில் இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டு வருகின்ற இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் இங்கு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் காற்றாலைகளை அமைப்பதற்கென இங்கு கடற்படை முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம் என்ற பெயரில் கடற்படை முகாம்களை அமைத்து இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை மேலும் இறுக்குவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்தத் தீவுகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்துமாயின் எதிர்காலத்தில் மேற்படித் தீவுகளில் தமிழ் மக்கள் வாழ முடியாத நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தீவுகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படுமென்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த வாரம் கொரியத் தூதுவருடன் நெடுந்தீவுக்குச் சென்ற சிறிலங்காவின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். இதன் பின்னர் அமைச்சின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலேயே உயிரியல் மின்சாரம் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளுக்கே உயிரியல் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்படி தீவுகளில் வாழும் மக்களுக்கு இலங்கை மின்சார சபையினூடாக மின்சாரம் வழங்க முடியாமலுள்ளது என்பதைக் காரணமாகக் காட்டுகின்ற சிறிலங்கா அரசாங்கம் கொரிய நாட்டின் உதவியுடன் உயிரியல் மின்சாரம் வழங்குதல் என்ற போர்வையில் இந்தத் தீவுகளை ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ் குடாநாட்டிற்கு தற்போது இலங்கை மின்சார சபையும் நொதேர்ன் பவர் மற்றும் அக்றிகோ ஆகிய தனியார் நிறுவனங்களும் இணைந்து மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இங்கு தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் தற்போது யாழ்ப்பாணத்திற்கு இலக்சபானா மின்சாரம் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்த லக்சபானா மின்சாரத்தை தீவகத்திற்கு விநியோகிக்க முடியுமென்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது உயிரியல் மின்சாரம் என்ற கதை கசியவிடப்பட்டிருக்கிறது. உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் காற்றாலை மின்சாரம் அமைப்பதற்கும் அதற்கான பாதுகாப்பு என்ற போர்வையில் இங்கு கடற்படைத் தளங்களை அமைப்பதுமே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. காற்றாலை மின்சாரம் என்ற போர்வையில் இங்கு அமைக்கப்படுகின்ற கோபுரங்கள் மூலம் கடற்கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் சிறிலங்கா முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் நிலைய அமைப்புக்காக இந்த தீவுகளிலுள்ள அரச காணிகள் மற்றும் பொதுக் காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டித் தருமாறு இந்த நான்கு தீவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்கள் பணிக்கப்பட்டிருக்கின்றனர். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் பாரிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்படுமாயின் இந்திய மீனவர்களுக்கு குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு அது பெரும் பாதிப்பாக அமையும். இந்த விடயத்தில் தமிழக மீனவர்களும் தமிழக அரசியல்வாதிகளும் மிகவும் அக்கறை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்போது அனுபவிக்கும் நெருக்கடிகளை விட எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இப்போது சிறிலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் சொல்லுந்தரமன்று. கடலுக்கு தொழில் செய்ய வருகின்ற தமிழக மீனவர்கள் தமது கடலில் தொழில் செய்து கொண்டிருக்கின்ற போதே கடல் எல்லையைத் தாண்டி விட்டனர், அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்துவிட்டனர் என்று காரணம் கூறி சிறிலங்கா கடற்படை அவர்களைக் கொன்று குவிக்கிறது. தமிழக கடற்றொழிலாளர்களின் வீடுகளில் தினமும் ஒரு வீட்டில் மரண ஓலத்தை சிங்கள கடற்படை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வடக்கிலுள்ள மேற்படி தீவுகளில் பாரிய கடற்படை முகாம்கள் அமையுமாயின் அது தமிழக மீனவர்களின் ஓட்டுமொத்த வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும். இந்த விடயங்கள் தொடர்பில் தமிழக மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவில்லையாயின் அது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். சிங்கள அரசும் சிங்கள படையினரும் இனவெறியர்கள், கொலை வெறியர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் மிகக் கோரமாக கொன்றொழித்த சிங்கள இராணுவம் மற்றும் கடற்படையிடம் கடலிலும் தரையிலும் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே மேற்படி மின் நிலையம் அமைத்தலைத் தடுத்து இந்தத் தீவில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் தமிழ் மற்றும் தமிழக மீனவர்களின் சுதந்திரமான தொழிலுக்கும் உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.