பக்கங்கள்

09 செப்டம்பர் 2012

கப்பலேந்தி மாதா ஆலயத்தாக்குதல் சம்பவத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்.

மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த காடையர் குழுவொன்று குறித்த ஆலயத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு,பட்டாசுகளை கொளுத்தி குறித்த ஆராதனையினைக் குழப்ப முயற்சி செய்தமை மத அனுஸ்டானங்களையும்,இன ஒற்றுமையையும் சீர் குலைக்கும் செயலாகக் காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தென் பகுதியில் முஸ்ஸிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்,பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களும் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு நாட்டில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழுகின்ற இடங்களில் தமது வழிபாட்டுத்தலங்களை அமைத்து வழிபட முடியும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அண்மைக்காலங்களாக மன்னார் கருசல் கிராமத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது அப்பகுதிக்கு வரும் காடையர்கள் மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று விடுகின்றனர். குறித்த சம்பவத்தினால் அப்பகுதி கத்தோலிக்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலயத்தை நோக்கி கற்களினால் எறிந்து விட்டு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளனர். கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் அக் காடையர்களினால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர். இதனால் அன்றைய தினம் இடம் பெற்ற வேஸ்பர் ஆராதனை குழப்பமடைந்த நிலையிலே காணப்பட்டது. இப்பகுதியில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் காடையர் குழு மேற்கொண்ட குறித்த நடவடிக்கையினால் அக்கிராமத்தில் பாரியதோர் இனக்கலவரத்தைத் தோற்றுவிக்கும் செயலாகவே இந்தச்சம்பவம் அமைந்துள்ளது. எனவே தொடர்ந்தும் இத்தகையதொர்ய் சம்பவம் இடம் பெறாது இருக்க சம்பவத்துடன் ஈடுபட்ட குறித்த குழுவினர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்,தமிழ்,முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும்,இச்சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.