வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்துக்கு மூடுவிழா செய்வதற்காக அங்கு தங்கியிருந்த கேப்பாப்புலவு மக்களை நிர்ப்பந்தித்து அரசு வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவுப் பகுதியில் இன்னமும் படைத்தளங்கள் விலக்கப்படாததோடு, கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"இலங்கையில் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு அவற்றில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்காகவே இவ்வாறு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றோம்'' என்று பாதிக்கப்பட்ட மக்கள் நேற்றிரவு "உதய'னுக்குத் தெரிவித்தனர்.
ஜெனிவாவில் நடை பெற்றுவரும் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் ஒன்றாக மீள்குடியமர்வு முற்றுப்பெற்று விட்டது. என்று காட்டுவதற்காகவும் இந்தப் பலவந்த வெளியேற்றம் நடைபெறுவதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள கேப்பாப்புலவைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் தமது சொந்த ஊரில் மீள்குடியமர அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை சீனியாமோட்டை என்ற இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நலன்புரி நிலையத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று, முகாமில் இருந்து மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியேற வேண்டும் எனவும் 25ஆம் திகதி முதல் முகாம் மூடப்படவுள்ளதால் அதற்குப் பின்னர் முகாமில் தங்கியுள்ளோருக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் கண்டிப்பான தொனியில் அறிவுறுத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருமாதங்களின் பின்னர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் வேறு வழியின்றி நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் குடியேறுவதற்காக நேற்று இரவிரவாகப் பொருள்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பொருள்களை ஏற்றுவதற்கான வாகன வசதிகளைக் கூட அரசு பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தமது சொந்தச் செலவிலேயே வாகனங்களை வாடகைக்கு அமர்த்திப் பொருள்களை பொதுமக்கள் ஏற்றினர்.
"நாங்கள் எங்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியமர்த்துமாறு பலமுறை போராடியும் பார்த்துவிட்டோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முகாமில் இப்போது எஞ்சியிருப்பவர்களில் நிறையப்பேர் ஆண் துணை இல்லாதவர்கள். இதைப் பயன்படுத்தி இப்போது முகாம் பகுதியில் திருட்டுகளும் அதிகரித்துவிட்டன. இனி முகாமில் தங்கியிருந்தால் எந்தவித உதவியும் கிடைக்காது. பட்டினியால் நாங்கள் சாக வேண்டியதுதான். எனவேதான் வேறுவழியின்றித் தற்காலிக இடத்திலாவது தங்கியிருக்க முடிவெடுத்துள்ளோம்.'' என்று முகாம் வாசி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
மீள்குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கண்ணிவெடி அகற்றல் பூர்த்தியாவில்லை என்று கூறி நிர்க்கதியாக விடப்பட்ட மந்துவில், மல்லிகைத்தீவு மக்களைப்போலத் தாமும் நிர்க்கதிக்கு உள்ளாக வேண்டி வருமோ என்று கேப்பாபுலவு மக்களும் அச்சம் தெரிவித்தனர்.
நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி, கேபிள் அன்ரனா, தொலைத்தொடர்பு சாதனங்கள், தளபாடங்கள் என்பவற்றைத் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அரச அதிகாரிகள் எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை கேப்பாபுலவு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை உடன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணிப்புரைக்கு அமைவாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்த 314 குடும்பங்களையும் வேறு இடங்களிலாவது மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் இருமாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361 குடும்பங்களே முகாமில் தங்கியுள்ளதாக அரச தரப்புக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.