கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதித்த நிபந்தனைகள், இன ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்று அந்தக் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு அளித்திருந்தது.
கிழக்கில் ஆளும்கட்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு எடுத்த முடிவுக்கான காரணங்கள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவில்லை.
இங்கு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலர் ஹசன் அலி,
"கிழக்கு மாகாண முதல்வராக பதவியேற்றுள்ள நஜீப் அப்துல் மஜீத், இரண்டரை ஆண்டுகளின் பின் பதவி விலகி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு வழிவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்துடன் எழுத்துமூல உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் எனவும், தமிழர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் எமது கட்சி யோசனை தெரிவித்துள்ளது.
இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவியை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கத் தவறினால், கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து புதிய தீர்மானத்தை மேற்கொள்வோம்.
கிழக்கு மாகாணசபையில் ஆதரவளிப்பதற்கு, வேறு பல முக்கிய நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன ஒற்றுமையின்மை ஏற்படலாம் என்பதால் தற்போது அவற்றை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை." என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.