சாமியார் நித்யானந்தாவுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. அவரை 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் நித்யானந்தா, மறுநாளே கர்நாடகா கொண்டு வரப்பட்டு ராம்நகர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கர்நாடக சி.ஐ.டி. போலீசுக்கு நீதிபதி அனுமதி அளித்தார். அதன் பிறகு, தலா 2 நாட்கள் என இரண்டு முறை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த காவல் நேற்றுடன் முடிந்ததால், ராம்நகர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி. போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். குற்றவாளி கூண்டில் நின்ற நித்யானந்தாவிடம், ‘ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று நீதிபதி கேட்டார். ‘‘எனக்கு தனிமை சிறை வேண்டும், அதில் பூஜை, தியானம், யோகா செய்யவும், ஆசிரம உணவை சாப்பிடவும் அனுமதிக்க வேண்டும்’ என்று சிரித்தப்படி வேண்டுகோள் விடுத்தார். ஆசிரம உணவைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் அனுமதி அளித்த நீதிபதி, அவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், அவருக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் உணவுகளை மட்டுமே வழங்கும்படியும் போலீசுக்கு உத்தரவிட்டார். பெண்கள் சிறை: இதைத் தொடர்ந்து, ராம்நகர் மாவட்ட துணை சிறைச்சாலையில் உள்ள பெண்கள் பிரிவில் நித்யானந்தா அடைக்கப்பட்டார். இந்த பிரிவு காலியாக இருப்பதோடு, தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி அவர் அடைக்கப்பட்டதாக போலீசார் கூறினர். இருப்பினும், இந்த பிரிவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில், அவரை தினமும் கண்காணிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இறுதி நாளான நேற்று, ரஞ்சிதா உடனான தொடர்பு, பணப் பட்டுவாடா, வெளிநாட்டு தொடர்பு, தன்னிடம் உள்ள வசிய மந்திர சக்தி உட்பட பல தகவல்களை போலீசிடம் அவர் கூறியுள்ளார். அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விவரங்கள் கிடைத்து விட்டதால் போலீஸ் காவலை நீட்டிக்கும்படி போலீசார் கேட்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.