பிரித்தானியாவில் இடம்பெற்ற தேர்தலையடுத்து, நேற்றிரவு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்று காலை தேர்தல் முடிவுகள் சில வெளியாகின. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 325 இடங்களுக்கான தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 163 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சி ஆட்சியே நடந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் ஒன்றைத் தவிர 649 தொகுதிகளில் நேற்று வாக்கு பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் 4,150 வேட்பாளர்கள் போட்டிட்டனர்.
ஆளும் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகி, இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாகின. 325 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எதிர்க்கட்சியான கன்சர் வேடிவ் கட்சி 163 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 123 இடங்களை பிடித்து 2ஆவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பிரீத்தி படேல், விதம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
தற்போது பாதி தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, ஆட்சி அமைக்கும் உரிமையை தொழிலாளர் கட்சி அரசு இழந்துவிட்டதாக கன்சர் வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குதான் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி 90 இடங்களை இழக்கும் அபாயம் உள்ளது.
இருந்தும் தன்னால் பலமான, நிலையான, நேர்மையான அரசை அமைக்க முடியும் என்று பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். எனவே, தொழிலாளர் கட்சி கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு கன்சர்வேடிவ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பிரவுணின் இந்த முயற்சி அரசியலில் வெட்க கேடானது என அக்கட்சியின் மூத்த தலைவர் வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மற்றொரு இந்திய வம்சாவளி பெண்ணான வலேரிவாஷ், வால்சால் சவுத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பியான கெய்த் வாஷின் சகோதரி ஆவார்.
இங்கிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் அண்ணன்- தங்கை இருவரும் ஒரே நேரத்தில் எம்.பி.யாக இருப்பது இதுவே முதல் தடவை.
இந்தத் தேர்தலில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 89 பேர் போட்டியிட்டனர். இவர்களில் இதுவரை 15 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அநேகர் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.