பக்கங்கள்

17 மே 2010

வலிகளினால் சோர்ந்துவிடாது விடுதலை பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.-அரசியல்துறை அறிக்கை.




எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக்கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் முழுவடிவம் பின்வருமாறு:-
அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 17/05/2010
எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!
எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாதநிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எமது இனத்தின் வலி மிகவும் கொடியது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக்கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.
இலங்கை அரசும் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்துகொள்ளாத சில நாடுகளும் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை பின்னடைவுக்கு இட்டுசென்றன. எனினும் வரலாறுகள் தந்த படிப்பினையிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம். எம் ஒவ்வொருவருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீயை சுடர்விட்டு எரியச் செய்வோம். எமது வரலாற்றில் இடி விழுந்த இந்நாளில் அனைத்து மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து வரலாற்றின் வலிகளைப் படிக்கற்களாக மாற்றி சிங்கள தேசத்துக்கும் உலகநாடுகளுக்கும் மீண்டும் நாம் யாரென்பதை உணர்த்துவோம்.
எம்மினத்தின் தாயக, புலம்சார் அரசியல் தலைவர்களே!
எதிரியின் சூழ்ச்சிக்குள் நாம் சிக்குண்டு சிதைந்து போகாமல் எம்மினத்தின் விடுதலையை மனதில் நிறுத்தி அரசியல் ஒருமைப்பாட்டுடனும் இலட்சிய உறுதியுடனும் அணிதிரண்டு எம் தலைவன் காட்டிய விடுதலைப் பாதையில் துணிந்து செல்வோம்.
தாயக உறவுகளே!
இன்று எம்மை சிங்களதேசம் அடிமை கொண்டுள்ளது. எமது உறவுகளை கொன்றொழித்து அனாதைகள் ஆக்கியுள்ளது. சொத்துக்களைச் சூரையாடி ஏதிலிகள் முகாம்களுக்குள் அடைத்துள்ளது. தமிழ்மக்கள் முளுமையாக மீள்குடியேற்றப்படாமல் எமது தாயக பிரதேசமெங்கும் முப்படை முகாம்களும் பொலிஸ் நிலையங்களும் நிறுவப்படுகின்றன. தமிழ்மண்ணில் சமூக பண்பாட்டு சீர்கேடுகள் எதிரியால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.
தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களையும் எமது மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களையும் அழித்து சிங்கள - பெளத்த அடையாளச் சின்னங்களும் இராணுவ நினைவுத் தூபிகளும் நிறுவப்படுகின்றன.
சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு தமிழீழம் சிங்கள மயப்படுத்தப்படுகிறது. இந்நடவடிக்கைகள் எம்மினத்தின் தேசிய ஆன்மாவை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறது. சிங்களத்தின் இச்செயலைத் தடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் தாயகத்திற்கான கடமையும் பொறுப்புமாகும்.
தமிழ்மக்களினது போராட்டம் உரிமைக்கானதே தவிர சலுகைக்கானது அன்று, தமிழ்மண் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும், சலுகைகளுக்காக கையேந்தாது என்பதை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்வோம். எமது போராட்டத்திற்கு என்றும் பக்கபலமாக இருப்பது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழீழ உறவுகளே. தொடர்ந்தும் அவர்களது துணையுடன் சிதைக்கப்பட்டிருக்கும் எம் மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து நாம் மீண்டும் பிறப்பெடுப்போம் என்று இந்நாளில் உறுதிகொள்வோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஞா.பாலச்சந்திரன். இணைப்பாளர், அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். தொடர்புக்கு: politicalwing@viduthalaipulikal.net
கருத்துக்களை அனுப்ப: comments@viduthalaipulikal.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.