பக்கங்கள்

20 மே 2010

புலுடா விடும் நக்கீரனுக்கு சாட்டையடி கொடுத்தது அதிர்வு இணையம்!


சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்கிற பத்திரிகையாளர், இலங்கை சென்றதாகவும். அங்கிருந்து அவர் திருகோணமலை சென்று, பின்னர் 4 கிலோ மீட்டர் நடந்துசென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் ராமைச் சந்தித்ததாகவும் நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பல சுவாரசியமான விடயங்கள் அடங்கியுள்ளன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான திருகோணமலைப் பகுதிக்குச் சென்ற தமிழக பத்திரிகையாளர் பாண்டியனை, ஒரு வெள்ளை வான் வந்து கூட்டிச் சென்றதாகவும், அதில் பல இளைஞர்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று குறிப்பிடும் அவர், அவர்கள் வாக்கிடோக்கி வைத்திருந்ததாக கூறியிருப்பது வேடிக்கையான விடயம். தற்செயலாக ஏதாவது ஒரு சோதனைச் சாவடியில் இராணுவம் இவர்களின் வாகனத்தை நிறுத்தி சோதித்தால் வாக்கிடோக்கியைப் பார்க்கமாட்டார்களா? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழையும் புலிகள் இவ்வாறு செல்வார்களா? இலங்கை புலனாய்வுப் பிரிவிற்காக வேலை செய்வோரால் மட்டுமே இது சாத்தியம் என்பது, பாவம் பாண்டியனுக்கு புரியவில்லையா?, இது போல பல புலுடாக்களுடன் ஒரு கதை சொல்லியிருக்கிறது நக்கீரன்.அத்தோடு இருண்ட காட்டுப் பகுதிக்குள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற பத்திரிகையாளர் பாண்டியன் 50 புலிகளைக் கண்டதாகவும், இன்னும் 6000 புலிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு நின்ற 50 புலிகளும் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், அங்கு சமையல் செய்ததாகவும் குறிப்பிடும் பாண்டியன் அவர்கள், புகை அதிகம் வராத மரத்தை அவர்கள் பாவித்ததாகவும் கூறியிருக்கிறார். 50 பேருக்கு காட்டில் சமைப்பதே கடினம், அதுவும் 6000 பேருக்கு புகைவராமல் சமைக்க முடியுமா? புலிகள் இதுவரை காலமும் தமக்கு என்று ஒரு இடத்தை கைப்பற்றி வைத்திருந்தார்கள், அங்குள்ள முகாம்களில் அவர்கள் சமைப்பார்கள், மற்றும் உலர் உணவுப் பொருட்களையே அவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவர் கூறுவதுபோல 6000 போராளிகள் ராம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்களுக்கான உணவுகளை யார் வழங்குகிறார்கள்? எவ்வாறு கொண்டுசெல்லப்படுகிறது? என்பது இங்கு பெரும் கேள்வியாக அமைகிறது.அதாவது பாண்டியன் சமீபத்தில் இலங்கை சென்று ராமை சந்தித்தாக பரபரப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டு, தமது புத்தகத்தின் விற்பனையைப் பெருக்க நக்கீரன் முயல்கிறது என்பது யாவரும் அறிந்த விடயம். சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்த காலகட்டத்தில், அவரால் கடத்தப்பட்டவர்கள் பலர். அப்படி கடத்தப்படும்போது நக்கீரன் கோபால் வந்தால் மட்டுமே தான் பேசத் தயார் என பல தடவை வீரப்பன் பேரம் பேசியது உண்டு, இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை நாம் நன்கறிவோம். நக்கீரன் புத்தகம் லட்சக்கணக்கில் விற்பனையாகவே இவர் இவ்வாறு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என பலரும் அறிவார்கள். அது ஒரு வியாபாரத் தந்திரமாக இருந்தது. ஆனால் தற்போது நக்கீரன் பணத்தாசை, ஒரு இன விடுதலைமேல் விளையாடுகிறது, அது எந்தவகையில் நியாயம்?தமிழ் நாட்டில் எத்தனையோ பரபரப்பான செய்திகள் இருந்தும் நக்கீரன் ஏன் ஈழத் தமிழர்கள் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமைகொடுத்து வெளியிடுகிறது? ஈழத்தில் ஒரு போராட்டம் வெடிக்க இருப்பதாகவும், அதற்கு தலைமை தாங்கி ராம் அவர்கள் போராட இருப்பதாகவும் ஏன் செய்திகளைப் பரப்புகிறது. ராம் இலங்கை அரசின் பிடியில் இல்லை இருண்டமலைப் பிரதேசத்தில் உள்ளார் என தெரிவிப்பதன் நோக்கம் தான் என்ன? ஒரு உதாரணத்திற்குச் சொல்வோம் ராம் உண்மையான போராளி என்று, அப்படி இருந்தால் கூட அவர் தன்னிடம் 6000 போராளிகள் இருப்பதை ஒப்புக்கொள்வாரா? இல்லை தான் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதைத் தான் இப்படி வெட்டவெளிச்சமாகச் சொல்வாரா?கேட்பவன் கேணையனாக இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்றும் சொல்லுவார்கள்.கற்பனையின் ஒரு உச்சக்கட்டமாக, தன்னை ராம் பார்க்க வரும்போது ஒரு பிரபாகரன் போலத் தோற்றமளித்ததாக அவர் வர்ணிப்பதும், நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், ஒரு மிடுக்கான நடை என ஒரு சினிமா படக் கதாநாயன் வருவதுபோல ஸ்டன் காட்டி இருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன். பல இடங்களில் பிரபாகரன், பிரபாகரன் என்று மட்டும் குறிப்பிடும் நக்கீரன், தலைவர் பிரபாகரன் அல்லது மேதகு பிரபாகரன் என்று குறிப்பிடாதது ஏன்? கருணாந்தியை எழுதும் போது கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடும் நக்கீரன், இவ் விடயத்தில் ஏன் அவ்வாறு குறிப்பிடவில்லை? எமது தேசிய தலைவரை மதிக்காது, ஒரு வார்த்தைப் பிரயோகத்தைக் கூட சரிவர கையாளத் தெரியாத கையாலாகாத நக்கீரன், எமது தலைவரை அப்பட்டமாக இழிவுபடுத்தியுள்ளது.தேசிய தலைவரை அவமதிக்கும் இவர்களா ஈழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்?. தேசிய தலைவர் மேதகு பிரபாகரனுடன் ஒப்பிட இந்த ராம் யார்? இடுப்பில் ஒரு கறுப்பு பெலிட் கட்டியிருந்தால் தேசிய தலைவராகிவிடலாம் என நினைக்கிறது நக்கீரன் குழுமம். காசுக்காக நக்கிப் பிழைக்கும் நக்கீரனுக்குத் தெரியுமா எமது உன்னத தலைவன் பற்றி?ராம் அவ்வாறு நடந்து வருகிறார், ராம் இவ்வாறு நடந்து வருகிறார் போராட்டம் இனி வெடிக்கும், 6000 போராளிகள் தயார் நிலையில் உள்ளனர், சமீபத்தில் 15 இராணுவத்தைக் கொன்றோம் என்று எல்லாம் ஒரு 70 மில்லிமீட்டர் பயாஸ்கோப் பிலிம் காட்டியுள்ளது நக்கீரன். இதை விட இவர்கள் சினிமாக் கதை எழுதி விற்றால் நல்ல காசு சம்பாதிக்கலாமே, ஏன் எங்கள் போராட்டத்தை கூறுபோட்டு விற்கிறீர்கள். உன்னதமான பத்திரிகைத் துறையை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள். ராம் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதற்கான பல ஆதாரங்கள் ஏற்கனவே பல தமிழ் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் நக்கீரன் குழுமம் தற்போது இணைந்துவிட்டதா என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளது. ராமை இவர்கள் ஏன் முன் நிலைப்படுத்த முயல்கிறார்கள் என்பதில் பல பின்புலங்கள் இருக்கின்றன. அவதானமாக நாம் செயல்படவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். தமிழர்களின் போராட்டத்தைச் சிதைக்க நினைக்கும் இணையங்கள் அடையாளம் காணப்படவேண்டும். எதிரிகள் முளையிலேயே கருவறுக்கப்படவேண்டும்!போராட்டத்தின் வடிவம் தற்போது மாறியுள்ள நிலையில், இலங்கையில் போராட்டம் வெடிக்க உள்ளதாகக் கூறி, ராமுக்கு உதவிசெய்யுங்கள் என்று கூறி பெரும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் மனக் கணக்கு போடுகிறது.புலிகள் மீதமில்லை என நாம் இங்கு கூறவரவில்லை. விடுதலைப் புலிகள் ஈழ மண்ணில் இன்னும் வேறூன்றி இருக்கிறார்கள். எவராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இவர் சொல்லும் பகுதியில் அல்ல. அவர்கள் தற்காலிகமாக தமது போராட்டத்தை மௌனித்துள்ளனர். அரசியல் போரை அங்குரார்ப்பனம் செய்துள்ளனர். தகுந்த நேரத்தில் வெளியே வருவார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் ஆயுதங்களைக் கையில் ஏந்துவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இதனிடையே இந்த இந்திய மற்றும் இலங்கை அரசின் கைக்கூலிகள் செயல்களைக் கண்டு ஈழத் தமிழர்கள் அஞ்சப்போவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.