என்னதான் வல்லரசாக இருந்தாலும் உலகுக்கே வழிகாட்டும் அறிவியல் ஆசானாக இருந்தாலும் போர்த்திறம் என்பது ரத்தத்தில் ஊறி வர வேண்டுமே தவிர போர்க்கருவி மூலம் அல்ல என்பதை ஆப்கானிஸ்தானம் அமெரிக்காவுக்கு உணர்த்திவிட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கி சண்டை போட்டுவரும் அமெரிக்காவுக்கு, இந்தத் தலிபான்களை நம்மால் அடக்கவே முடியவில்லையே ஏன் என்ற கேள்வி மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அமெரிக்க ராணுவத்தின் ஆய்வுப் பிரிவு களத்தில் சென்று செய்த சில ஆய்வுகளுக்குப் பிறகுதான் கோளாறு எங்கே என்று தெரியவந்தது. அமெரிக்கா இப்போது எம்-4 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறது. இது மிகவும் நவீனமான துப்பாக்கி என்பதில் சந்தேகமே இல்லை. 5.56 மில்லி மீட்டர் குறுக்களவுள்ள குண்டுகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. வியத்நாம் போரில் பயன்படுத்திய எம்-16 ரக துப்பாக்கியை மேம்படுத்தி, நவீனப்படுத்தியதன் மூலம்தான் எம்-4 உருவாக்கப்பட்டது. அப்படியிருந்தும் இது பயன் தராமல் இருப்பது ஏன் என்று ஆய்வுக்குழு இப்போது கண்டுபிடித்துவிட்டது. தலிபான்கள் நவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தாமல், இன்னும் பழையகால துப்பாக்கிகளையே பயன்படுத்துகின்றனர். முதல் காரணம், புதிய துப்பாக்கிகளுக்கு நிறைய செலவழிக்க வேண்டும். அடுத்து, பழைய துப்பாக்கிகளைக் கையாண்ட அனுபவம் தரும் நம்பிக்கை காரணமாக துப்பாக்கியை மாற்றிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மூன்றாவதாக, தங்களுடைய எதிரிகளை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்த பழைய துப்பாக்கிகளே தலிபான்களுக்குப் போதுமானதாக இருக்கின்றன. அமெரிக்கா பயன்படுத்தும் எம்.-4 ரக நவீன துப்பாக்கிகள் சில நிமிஷங்களுக்கெல்லாம் ஏராளமான குண்டுகளை துரிதகதியில் உமிழ்ந்துவிடுகின்றன. இந்தத் துப்பாக்கி வியத்நாமிலும் இராக்கிலும் ஓரளவுக்குப் பலன் தந்ததற்குக் காரணமே எதிரிகள் நகர்ப்புறங்களில், மிக அருகில் வந்து சிக்கியதுதான். வியத்நாமில் நகரங்களிலும் காடுகளிலும் எதிரிகளை மிக நெருக்கமாக சந்தித்து சுட்டனர். எனவே இந்தத் துப்பாக்கிகளின் கொல்(லும்)திறன் கூடுதலாக இருந்தது. இராக்கில் பாக்தாத், ரமாடி, பலூஜா போன்ற நகரங்களில்தான் அமெரிக்கப் படைகள் அதிகம் சுட்டன. அங்கெல்லாம் எதிரிகள் மிக அருகில் வந்து துப்பாக்கிக் குண்டுகளை வாங்கிக் கொண்டனர். ஆப்கானிஸ்தானமோ மலைப் பாங்கான பகுதி. இங்கே தலிபான்களைப் பார்த்து அமெரிக்க வீரர்கள் சுட்டதுமே அந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தாலும் எதிரிகள் இருக்குமிடம் அருகில் செல்லும் போது வேகம் குறைந்து, இலக்கிலிருந்து விலகி தாக்குவதால் தாக்குதலுக்கே வலுவில்லாமல் போய்விடுகிறது. தலிபான்கள் அமெரிக்க வீரர்கள் வருவதைக் கவனிக்காமல் எங்காவது பார்த்துக் கொண்டும், போய்க்கொண்டும் இருந்தாலும் அமெரிக்க துப்பாக்கிகளின் சத்தம் அவர்களை உஷார்படுத்திவிடுகிறது. அத்துடன் அந்த குண்டுகள் வலுவில்லாமல் இருப்பதால் சாதாரண தடுப்புகள் மூலமே தலிபான்கள் அடிபடாமல் தப்பி விடுகின்றனர். அதே சமயம் அவர்கள் வைத்துள்ள பழமையான துப்பாக்கிகள் 2,000 அடி முதல் 2,500 அடி வரையுள்ள இலக்குகளைக்கூட ஊடுருவிச் செல்லக்கூடியவை. எனவே தலிபான்கள் திருப்பிச்சுட்டால் அந்த குண்டுகள் அமெரிக்க வீரர்கள் மீதும் அவர்களுடன் செல்லும் இதர வீரர்கள் மீதும் பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆய்வு காரணமாக துப்பாக்கிகளை மாற்றிக்கொள்ள அமெரிக்க ராணுவத் தலைமை முடிவு செய்திருக்கிறது. அத்துடன் தன்னுடைய எல்லா படைப்பிரிவுகளிலும் குறிபார்த்துச் சுடும் திறமையுள்ள வீரர்கள் 10 அல்லது 12 பேரை குழுவாக நியமித்துக் கொண்டு, தலிபான்கள் பயன்படுத்துவதைப் போன்ற பழைய, அதே சமயம் வலுவான துப்பாக்கிகளை அவர்களிடம் தந்து தலிபான்களுக்கு ஈடு கொடுக்க அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தானர்களை முதலில் அடக்க முற்பட்ட பிரிட்டிஷார் (1832-1842) பிரெüன் பெஸ் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். ஆப்கானிஸ்தானியர்களோ ஜெசைல் பிளிண்ட்லாக்ஸ் என்கிற பழைய ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அவர்களுடைய தாக்குதல்களை முறியடித்தனர். 1980-களில் சோவியத் யூனியனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்திப் பார்த்தனர். ஆப்கானிஸ்தானியர்கள் இரண்டாவது உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட லீ-என்ஃபீல்டு ரக துப்பாக்கிகளைக் கொண்டே அவர்களை முறியடித்தனர். இந்த ரக துப்பாக்கியில் பெரிய லீவரும் போல்டும் இருக்கும். இப்போது அமெரிக்கா எம். 4 ரக துப்பாக்கிகளுக்குப் பதிலாக எம் 110 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது. இவை 2,500 அடி தொலைவுவரை பாய்ந்து இலக்குகளை நாசப்படுத்தும். ஆப்கானிஸ்தானிய தலிபான்கள் போர்த் திறத்தைத் தங்களுடைய மூதாதையர்களிடமிருந்து பெற்றிருப்பதால், காலத்துக்கேற்ற நவீன ரகங்களை நாடாமல், போர்க்களத்துக்கேற்ற நம்பகமான துப்பாக்கிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.