இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேவ் தமிழ் பெங்களூரு கிளை தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் மற்றும் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கமும் இணைந்து நடத்திய இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகம் மற்றும் இந்திய முதலாளிகள் சம்மேளனத்திற்க்கும் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. இராசன் (தலைவர் .கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம்), திரு.பாலன் (கர்நாடக உயர் நீதி மன்ற வழக்கறிஞர்), திரு. சிவ சுந்தர் (கன்னட ஊடகவியலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஊடகவியளாலர் திரு.சிவ சுந்தர் , உலக ஊடகவியாளர்கள் இலங்கை அரசின் போர்குற்றத்தை வெளிக்கொணரும் இவ்வேளையில் இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்துவதன் மூலம் இனவெறி பிடித்த இலங்கை அரசை, நல்லரசு என்று நற்சான்றிதழ் வழங்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அப்பாவி தமிழர்களின் மீது பிரயோகித்து கொன்று குவித்த இனவெறி அரசுடன் இந்திய அரசு கொண்டுள்ள உறவானது, இந்தியர்களும் தமிழன படுகொலையில் பங்கேற்றதாக பொருள் கொள்ளவும், இந்தியர்கள் அனைவரது கரங்களிலும் தமிழர்களின் இரத்தக்கறை படிந்துள்ளது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் பாலன் அவர்கள், கொள்ளை அடிப்பதும், கொன்றொழிப்பதும் ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளாக உள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பில் உள்ள வளங்களை கொள்ளை அடிக்க, அங்குள்ள மக்களனைவரையும் நக்சல்கள் என்ற போர்வையின் கீழ் கொன்றழிப்பதை போல, தமிழர் நிலங்களை இந்திய வர்த்தக முதலாளிகள் கொள்ளை அடிக்க இனவெறி சிங்கள அரசுடன் சேர்ந்து இந்திய ஏகாதிபத்தியம் இணைந்து அங்கு வாழ்ந்த தமிழர்களை தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தி கொன்று குவித்தனர்.
உலக அரங்கில் இலங்கையின் போர் குற்றம் வெளிப்பட்டால் இந்தியாவின் கூட்டு சதியும் வெளிவருமென்ற அச்சத்தில் இந்திய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான திரை உலகின் உதவியுடன் இலங்கையில் அமைதி நிலவுவதாக ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் எனக் கூறினார்.
அதன் பிறகு பேசிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் இராசன், அப்பாவி தமிழ் பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் நச்சுக் குண்டுகள் வீசி கொலை செய்த கொடும் சிங்களவர்களை புறக்கணிக்க வேண்டியது தமிழர்கள் மாத்திரமல்ல மாந்த நேயம் உள்ள அனைவரது கடமையாகும். உலகத்தாரிடமிருந்து சிங்களவர்கள் செய்த இனப்படுகொலையை மறைக்க முனையும் இந்திய அரசு இந்திய திரைப்பட துறையின் மூலம், அவர்களின் விருது வழங்கும் விழாவை கொழும்பில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்துள்ளது.
அதே போல உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடமிருந்து மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மறக்கடிக்க இனத்துரோகி கருணாநிதியின் தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. உலகங்கிலும் வாழக்கூடிய தமிழர்கள் இலங்கையை புறக்கணிக்கும் அதே வேளையில், துரோகிகளால் நடத்தப்படும் செம்மொழி விழாவையும்,விருது வழங்கும் விழாவில் பங்கு கொள்ளும் திரை உலகினரையும் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் நிகழ்வில் கீழ்காணும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
1. விருது வழங்கும் விழாவின் இடத்தை மாற்று
2. இந்திய முதலாளிகள் சம்மேளனமே, இனப்படுகொலை நடந்த நாட்டோடு வர்த்தக உறவு கொள்ளாதே
3. கமல்ஹாசன் அவர்களே இனப்படுகொலை செய்த நாட்டோடு வர்த்தக உறவு கொண்டுள்ள FICCI யின் பொழுதுபோக்கு துறைத் தலைமை பதவியிலிருந்து விலகுங்கள்.
4. அமிதாப் மற்றும் சல்மான் கான் அவர்களே தமிழர் இரத்தக்கறை படிந்த இலங்கையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவை புறக்கணியுங்கள்.
5. மாந்த நேயமுள்ள சமூகமே போர்குற்றம் புரிந்த இலங்கை புறக்கணியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.