“செக்ஸ்” புகாரில் சிக்கி கைதான சாமியார் நித்யானந்தா போலீஸ் விசாரணைக்கு பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலீசார் 8 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தனர். ஆனாலும் அவர் தன் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லவில்லை.
எனவே நித்யானந்தாவுடன் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து தேவையான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டு உள்ளனர். நித்யானந்தாவுடன் படுக்கையில் ஒன்றாக இருந்த நடிகை ரஞ்சிதாவிடம் விசாரித்தால் முழு உண்மையும் வெளியே வரும் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால் அவரிடம் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர். ஆனால் செக்ஸ் விவகாரம் வெளி வந்ததும் ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.
அதே நேரத்தில் ரஞ்சிதா தனக்கு சட்ட உதவிகளை செய்ய டெல்லியை சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்றை நாடி உள்ளார்.
அந்த நிறுவனம் கர்நாடக போலீசாரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு வருகிறது. நித்யானந்தா மீதான வழக்கு எப்.ஐ.ஆரை இந்த சட்ட நிறுவனம் கேட்டது. அதை போலீசார் அனுப்பி வைத்தனர்.
ரஞ்சிதா இருப்பிடத்தை இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாததால் இந்த சட்ட நிறுவனம் மூலம் ரஞ்சிதாவுக்கு நோட்டீசு அனுப்பினார்கள். அதில் சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜராகி தன்னை விசாரணைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இது பற்றி ரஞ்சிதா சட்ட நிறுவன வக்கீல் கூறும் போது ரஞ்சிதா போலீஸ் முன்பு ஆஜராகி வாக்கு மூலம் அளிக்க தயாராக இருக்கிறார் என்றார்.
ஆனால் நோட்டீசு அனுப்பி 4 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ரஞ்சிதா போலீஸ் முன்பு ஆஜராகவில்லை. இதனால் கோபம் அடைந்துள்ள சி.ஐ.டி. போலீசார் ரஞ்சிதா மீது கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.
இது பற்றி சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி. சரன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஞ்சிதாவுக்கு அவரது வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பி விட்டோம். ஆனால் இதுவரை அவர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வில்லை.
மறுபடியும் அவருக்கு நாங்கள் நோட்டீசு அனுப்ப இருக்கிறோம். அதை ஏற்று அவர் உடனடியாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்.
இதற்காக இன்னும் 2 அல்லது 3 நாட்கள் வரை காத்து இருப்போம். அதற்குள் அவர் ஆஜராகவில்லை என்றால் கிரிமினல் நடைமுறை விதிகள் சட்டப்படி அவரை கைது செய்வோம்.
நித்யானந்தாவுடன், ரஞ்சிதா இருக்கும் வீடியோவை ஐதராபாத் தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தோம். அதை ஆய்வு செய்து அவர்கள் முதல் கட்ட அறிக்கையை அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் கெடு விதித்து உள்ளதால் விரைவில் ரஞ்சிதா போலீஸ் முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் அவரை கைது செய்வதுடன் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்யவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.
ரஞ்சிதாவை ஆஜர்படுத்தும்படி தமிழக நடிகர் சங்கத்திடமும் போலீசார் கேட்டுள்ளனர். இதற்காக சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் சென்னை வந்து நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து விட்டு சென்றுள்ளார். ரஞ்சிதா வக்கீல் ஒருவர் சென்னையில் இருக்கிறார். அவரையும் சி.ஐ.டி. அதிகாரி சந்தித்து ரஞ்சிதாவை ஆஜர் படுத்தும்படி கூறி இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.