பக்கங்கள்

11 மே 2010

கேரளாவில் கைதான தமிழர்கள் விடுதலை.

கொல்லத்தில் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த 7ம் தேதி இரவு ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல விடுதியில் சந்தேகத்தி்ற்கிடமான வகையில் பலர் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 38 இலங்கை தமிழர்களை கைது செய்தனர். அனைவரையும் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மத்திய, மாநில உளவுத்துறை, ராணுவ பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவு அதிகாரிகள், சென்னை ஐபி துணை இயக்குனர் பாஸ்கரன், கேரள ஐஜி பிரேமசந்திரன் உள்ளிட்டோர் நடத்திய விசாரணையில், இலங்கை தமிழர்களை கொச்சி வழியாக ஆஸ்திரேலியா , கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஸ்ரீலங்கா டிரிங் கோமால் தெருவை சேர்ந்த டென்னீசன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து டென்னீசன் உள்பட 8 பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு டென்னீசனை மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதியிடம் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி கொல்லம் மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்சித் மனு அளித்தார். இந்த வழக்கு மிக குழப்பமாக இருப்பதால் மத்திய உள்துறை மற்றும் இன்டர்போல் உதவியை நாட உள்ளதாக கேரள போலீசார் கூறுகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை தவிர மற்ற இலங்கை தமிழர்களை விடுவிக்கவும் அம்மாநில காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும், இன்று ராகுல் காந்தியின் கேரள சுற்றுப் பயணம் முடிந்த பின்புதான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.