பக்கங்கள்

26 மே 2010

தேசியத் தலைவரின் பாதை-கண்மணி.






ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்டு இறந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் குருதி கறையிலே முகிழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவர்களின் லட்சியங்கள் மாறவில்லை, அவர்களுக்கான எண்ணங்கள் இடைவிடாமல் விடுதலை என துடித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு போராளியும் தமது வாழ்வுக்காக, தமது வளத்திற்காக போராடியது கிடையாது. அப்படி போராடுவது ஒரு போராளியின் குணமும் கிடையாது. தேசிய தலைவர் இதைக் குறிப்பிடும்போது நாங்கள் புரட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அல்ல என்று சொல்வார். ஆக, அரசியல்வாதிகள் தமது தன்னல வாழ்வுக்காக, சமூக அக்கறையின்றி தம்மை நிலைநிறுத்திக் கொள்ள தமது வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள உழைப்பதென்பது இயல்பானதொன்று. அதை இந்திய அரசியலில் மிக எளிதாக நம்மால் காண முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை மிகச் சாதாரணமாக திரிந்து கொண்டிருந்த பலர், இன்று திடீர் பணக்காரர்களாக, கல்லூரி அதிபர்களாக எப்படி மாறினார்கள் என்றால், அதற்குக் காரணம் அரசியல்.
ஆனாலும் புரட்சிக்காரர்களை பொறுத்த மட்டில் அவர்களின் வாழ்வு முற்றிலுமாய் மக்களோடு மக்களாய், மக்களுக்காக வாழ்வதாகவே அமைந்துவிடுகிறது. இந்த வாழ்வை அவர்கள் விரும்பி ஏற்கிறார்கள். இதை யாரும் போராளிகள்மீது அறைவது கிடையாது. தமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்காக அவர்களின் விடுதலைக்காக தாம் சித்ரவதைகளை அனுபவிக்கவும், உயிரை கொடையாக்கவும் எந்த நேரத்திலும் விருப்பத்தோடு செயல்பாடுகிறார்கள். ஆகவே, போராளிகளின் வாழ்வு என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான வாழ்வாக இருக்கிறது. உலக அரங்கில் பெரும் கொடுங்கோலனாய் சித்தரிக்கப்பட்ட இட்லரின் அடக்குமுறை ஆட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்ட ஜூலிஸ் பூசிக், சித்ரவதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களை பொருத்தமட்டில் பொதுமக்களுக்கு அச்சதை ஏற்படுத்துவதின் மூலம் அவர்களை போராட்ட பாதையிலிருந்து திசை திருப்பி, அடங்கிப்போக செய்வதிலேதான் தமது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவார்கள், பயன்படுத்தினார்கள், பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அச்சம் ஒன்றுதான் ஆட்சியாளர்களின் பெரும் ஆற்றலாய் இருக்கிறது. அவர்கள் கோழைகளாக இருப்பதால், சாதாரண மக்களிடம்கூட கொடும் ஆயுதம் திணிப்பதிலே அதிக அக்கறைக் காட்டுகிறார்கள். இதன்மூலம் அவரின் முகத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் அவர்களின் பெரும் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கத்திலிருந்து அவர்கள் தொடக்கக்காலங்களிலிருந்தே மாறுபட்டது கிடையாது. இதுதான் அரச பயங்கரவாதத்தின் அடிப்படை பண்பாகும். ஜூலிஸ் பூசிக் கைதுசெய்யப்பட்டு, ராவன்ஸ்பார்க் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தபோது, அவரின் தாடி மயிர்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டது. அப்படி பிடுங்கப்படும்போது தெறித்த ரத்தம் முகம் முழுக்க பரவி, அவர் முகத்தை மிகக் கொடூரமாக காட்டியது. அந்த நிலையிலும்கூட அவர் சிரித்த முகத்தோடு அந்த கொடூரங்களை ஏற்றுக் கொண்டார். இத்தனை கொடுமைகளையும் ஏற்றுக் கொண்டப்பின்னரும்கூட அவர் சொல்கிறார், விடுதலை பெரும் இந்த தேசத்தை நாங்கள் காண மாட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனாலும்கூட இந்த துயர்களை நாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்வதற்குக் காரணம் எமது மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான். இதுதான் ஒரு போராளியின் கனவாக இருக்கிறது. இந்த விடுதலை களத்தின் நாயகர்கள் இப்படித்தான் களமாடுகிறார்கள். ஆனால் அரச பயங்கரவாத ஆற்றல்கள் இதை முற்றிலுமாக அழித்தொழிப்பதிலே பெரும் முனைப்புக் காட்டுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நம்மில் நீடித்திருக்கிறது. 1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலகாபாத்தில் இப்போது மோதிலால்நேரு பூங்கா என்று அழைக்கப்படும் ஆல்பிரட் பூங்காவில் தமது தோழர் ஒருவருடன் ஆசாத் பேசிக் கொண்டிருந்தபோது போலீசார் சுற்றி வளைக்கிறார்கள். அவருக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற ஒரு கடுமையான மோதலுக்குப் பிறகு தன் துப்பாக்கியின் கடைசி குண்டுக்கு ஆசாத் தன்னை பலியாக்கிக் கொண்டார். அந்த மோதலின் போது தாம் மறைந்திருந்து தாக்க உதவிப் புரிந்த அந்த மரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுச் சென்று பார்வையிட்டார்கள். இதைக் கண்ட அரசாங்கம் ஆசாத் மறைந்திருந்த அந்த மரத்தை வெட்டிப்போட்டது.
இன்று தமிழீழ மண்ணிலே தேசியத் தலைவர் வாழ்ந்த ஒரு வீடு மக்களின் விடுதலைக்கான உந்துதலாகிவிடுமோ என்ற அச்சத்தில் சிங்கள பேரினவாத அரசு அவர் வாழ்ந்த வீட்டை இடித்துத்தள்ளி இருக்கிறது. ஆக, வரலாற்றில் எப்போதுமே அரச பயங்கரவாதம் ஒரே படிமத்தில்தான் பயணம் செய்திருக்கிறது. அது, எந்த காலத்திலும் மக்களை அடக்கி ஒடுக்கவே முனைப்புக் காட்டி இருக்கிறது. இந்த நிலையிலிருந்து எந்தக் காலக்கட்டத்திலும் அதுதம்மை மாற்றிக் கொண்டது கிடையாது. அன்று ஆசாத் மறைந்திருந்த மரமானாலும், இன்று தேசியத் தலைவர் வாழ்ந்த இல்லமானாலும் அரசிற்கு இரண்டும் ஒன்றுதான். அது பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அரசானாலும், மகிந்தாவின் சிங்கள பாசிச அரசானாலும் பெயர்கள் தான் மாறியிருக்குமேத் தவிர, அதன் உள்ளடக்கமும் அதன் தன்மைகளும் வெவ்வேறாக இருந்தது கிடையாது. இருக்கப்போவதும் கிடையாது. எப்படி இந்த அரச ஆற்றல்கள் தம்முடைய எதேச்சதிகாரத்தை அழுத்தத்தோடு நிலைநாட்ட விரும்புகிறதோ, அதைக்காட்டிலும் மிக வேகமாக தமது அறிவாற்றலை பயன்படுத்தி பயணிக்கும் பண்பு கொண்டவர்களாக போராளிகள் களத்திலே இருக்கிறார்கள்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு இரத்த சிதறல்கள் நிகழ்ந்தேறி இருக்கிறது. தம்மை அர்ப்பணித்த எண்ணற்ற வீர இளைஞர்களின் இரத்த சுவடுகளில்தான் இந்த தேசம் வடிவமைக்கப்பட்டது என்பதை மறந்து, பாசிச அடக்குமுறையாளர்களுக்கு துணைப்போகும் இந்திய அரசிற்கு நாம் சில செய்திகளை சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஒருவேளை இத்தாலியில் பிறந்த சோனியாவிற்கு இந்த செய்தி புதிதாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் இருக்கும் பல்வேறு ஆற்றல்வாய்ந்த களப்போராளிகளுக்கு இந்த செய்தி தெரியாமல் இருக்க நியாயமில்லை.
1930ஆம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி பகவதி சரண் என்கின்ற ஒரு போராளி, தாம் தயாரித்த வெடிகுண்டை சோதித்தறிவதற்காக தமது நண்பர்கள் வைசம்பாயன், சுகதேவ்ராஜ் ஆகியோருடன் ரவி நதிக்கரையில் அடத்தியான காடுகளுக்கு இடையே பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்தது. பகவதி சரணின் கைகள் துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டியது. எவ்வித துணைக்கும் ஆளில்லாத அந்தப் பகுதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த பகவதி சரண், அந்த நேரத்திலும்கூட முகத்தில் புன்னகை தழுவ இருந்திருக்கிறான்.இந்த நிகழ்ச்சியை பகவதி சரணுடன் இந்த சகப்போராளி வைசம்பாயன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். ரத்தம் பெருக்கெடுத்தோடி தரையை நனைத்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியாத வேதனையிலும் அவர் முகத்தில் சிரிப்பு. அந்த போராளி உடல் துயரால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான்.
அவனின் கடைசி மூச்சிக்கு முன்பு பகத்சிங்கையும், தத்தையும் விடுவிக்கும் முயற்சிக்கு என் மரணம் தடையாக இருக்கக்கூடாது என்று மரணிக்கிறான். ஆக, எந்த நிலை என்றாலும் ஒரு போராளி தமது துயரத்தைவிட, தாம் கொண்ட லட்சியங்களையே முன்னோக்கி நடத்தி செல்ல முயற்சி செய்கிறான். அதிலிருந்து அவன் இறுதிவரை சமரசப்படுத்திக் கொண்டதே கிடையாது. இந்த வரலாற்று தகவல்களை நாம் சொல்வதற்குக் காரணம், இன்று இணையத்தளங்களில் தொடர்ந்து வெளிவரும் புகைப்படங்கள், தமிழர்களின் மனங்களில் ஒருவித சலிப்பையும், அச்சத்தையும் உருவாக்கலாம். எமது போராளிகள் சித்ரவதைக்குள்ளாவதும், அவர்கள் மிருகங்களைப்போல் சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களின் பிணங்களை குப்பைகளைப் போல் கொட்டுவதும் நமக்கு தவிப்பை உண்டாக்கலாம். ஆனால் இதையெல்லாம் உணர்ந்துதான், இதையெல்லாம் நிகழும் என்று அறிந்தபின்னர்தான் நமக்காக, நமது விடுதலைக்காக, நமது நாட்டின் மகிழ்ச்சிக்காக அவர்கள் இந்த பணியை விரும்பி ஏற்றார்கள். இதற்காக அவர்களின் அணைத்து ஆற்றல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு சிலிர்த்து நின்றது.
நாம் இப்படிப்பட்ட புகைப்படங்களை பார்த்தப்பின்னர் முன்னைக் காட்டிலும் நமக்குள் எழுச்சி கூடுதலாக்கப்பட வேண்டும். அந்த மரணம் நமக்காக நிகழ்ந்தது. அந்த சித்ரவதை நமக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த கொடூரம் நமது விடுதலைக்காக அவர்கள் விரும்பி நிகழ்த்தியது. இதைக் கண்டு நாம் பொங்கி எழ வேண்டும். இந்த சித்திரங்கள் நமது விடுதலையை உலுக்கிவிடுவதற்கான ஆயுதம் என்பதை நாம் இந்த நேரத்தில் நிதானித்து முடிவு செய்ய வேண்டும். நமது அசைவுகள், நமது செயல்கள் ஒவ்வொன்றும் இந்த போராளிகளுக்கு நன்றியுடையதாக இருக்க வேண்டும். தமிழீழ விடுதலை என்பது நமக்கு கிடைக்க, நமது பங்களிப்பு என்ன என்பதை நாம் இறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து போராடுவோம். நமது தேவையான நமது நாட்டை நாம் அடையும்வரை போராடுவோம். வீழ்ச்சி என்பது நிரந்தரமானது அல்ல. விடுதலை என்கிற மாபெரும் மகிழ்ச்சி நமக்கு முன்னால் அமர்ந்திருக்கிறது. நமது நகர்வு அதை நோக்கி என்பதை மறந்துவிட வேண்டாம். தேசிய தலைவரின் பாதை நம்மை அந்த மகிழ்ச்சியான நாட்டில் கொண்டுபோய் சேர்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.