பக்கங்கள்

17 மே 2010

எமது மண்ணையும் மக்களையும் விடுவிக்கும்வரை போராட்டம் தொடரட்டும்!



யூலை எப்படித் தமிழர்களது வரலாற்றில் கறுப்பு மாதமோ அதே போல் மே மாதமும் தமிழர்களது வரலாற்றில் ஒரு கறுப்பு மாதமாகும். போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிரியின் குண்டு வீச்சுக்கும் செல் அடிக்கும் பலியானார்கள். இதில் குழந்தைகளும் அடங்குவர்.
தங்கள் உறவுகளைக் காப்பாற்றும்படி புலம்பெயர் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அதனை எந்த நாடும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
தமிழர்களது ஆயுதப் போராட்டத்தை அழிக்க சிங்கள - பௌத்த இனவாத அரசுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கியிருந்த நாடுகள் எப்படி எம்மைக் காப்பாற்ற முன் வந்திருக்கும்?
தமிழக அரசு எம்மைக் கைவிட்டது. பதவியா இன மானமா என்று வந்த போது முதல்வர் கருணாநிதி தனது பதவியைக் காப்பாற்ற முடிவெடுத்தார்.
தாங்கள் இழந்த அரசை மீண்டும் வென்றெடுக்க நடத்தப்பட்ட தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிங்கள - பௌத்த வெறிபிடித்த இலங்கை அரசு "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்று பரப்புரை செய்தது. அதில் சிங்கள - பௌத்த வெறியர்கள் வெற்றி பெற்றார்கள்.
மேற்குலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் சிங்கள - பௌத்த அரசின் தமிழினப் படுகொலைக்கு பச்சைக் கொடி காட்டின. ஆயுதம், உளவு, புலனாய்வு, பயிற்சி போன்றவற்றைத் தாராளமாக வழங்கின.
போர் முடிந்த பின்னர்தான் பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைக்குக் களம் ஆடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களது தற்கொடை வீண்போகக் கூடாது. நாம் தொடர்ந்து எமது விடுதலைக்குப் போராட வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி எமது போராட்டம் ஓயக் கூடாது. தலை சாயக் கூடாது.
ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கப்படும். முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அது அடுத்த கட்ட போராட்டத்தின் தொடக்கம். விடுதலைப் பயணத்தில் தங்குமிடங்கள் இல்லை.
சிங்கள இலங்கை அரசு எமது மண்ணை ஆக்கிரமித்துள்ளது. யாழ்ப்பாணம், பூநகரி, காங்கேசன்துறை மற்றும் களிநொச்சியில் 60,000 சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு 110 மில்லியன் டொலர் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கான நிதியை சீனா வழங்குவதோடு கட்டுமானப் பொறுப்பையும் ஏற்றுள்ளது.
இதே நேரம் 80,000 தமிழ்மக்கள் வன்னி முகாம்களில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஆறு தகரத் தகடுகளோடும் ஐயாயிரம் பணத்தோடும் "மீள்குடியமர்த்தப்பட்ட" எமது மக்கள் தொழிலின்றி, கல்வி வாய்ப்பின்றி இன்னபிற அடிப்படை வசதிகளின்றி இடைத்தங்கல் முகாம்களில் வாடுகிறார்கள்.
போரினால் தமது வாழ்வாதாரங்களை இழந்து சிங்கள - பௌத்த இனவெறியின் அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி வாடும் எமது உறவுகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள்தான் உதவிட முன்வர வேண்டும்.
ஒன்றுபட்ட இலங்கைத் தீவில் எமது மக்கள் சுதந்திரத்தோடும் மானத்தோடும் பாதுகாப்போடும் வாழ முடியாது. தமிழ்மக்களின் தன்மானத்துக்கு அறைகூவல் விடுவது போல சிங்களவர்கள் போர் வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதுவொன்றே இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
எனவே எமது மண்ணையும் மக்களையும் விடுவிக்கும் வரை எமது போராட்டம் தொடரட்டும். வலி சுமந்த இந்த மாதத்தில் விழிகளில் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த உறுதியை எடுத்துக் கொள்வோம். என்றோ ஒரு நாள் எங்களது விழிகள் ஆனந்தக் கண்ணீர் கொட்டும்!
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்உணர்வை இழக்கலாமா? உணர்வைக் கொடுத்துஉயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா..?
-தமிழ் படைப்பாளிகள் கழகம்ரொறன்ரோ

17.05.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.