பக்கங்கள்

22 மே 2010

வன்னி மக்கள் பெரும் அவல வாழ்க்கை வாழ்கின்றனர்!செல்வம் அடைக்கலநாதன்.


சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வன்னி மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். அகதிகளாகவே காலத்தை ஓட்டும் நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டது. இது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன். மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார்.
கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட கூட்டமைப்பின் குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
நேற்றுக்காலை 10.00 மணி முதல் மாலைவரை இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பின்போது, முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, ஒழுமடு, மதியாமடு, வற்றாப்பளை, வன்னி விளாங்குளம் மற்றும் முல்லைத்தீவு நகர் உள்ளிட்ட பிரதேசங்களுக்குச் சென்ற மேற்படி நாடாளுமன்ற குழுவினர், அவர்களது குறை, நிறைகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கெண்டதாகவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் விபரிக்கையில்,
“யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதி வாழ்க்கை அனுபவித்த எமது மக்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மீள்குடியேற்றமானது பொருத்தமற்றதாகவே அமைந்துள்ளது. அதாவது இடம்பெயர்ந்த நிலையில் எவ்வாறு அகதிகளாக கூடாரங்களில் காலத்தைக் கடத்தினார்களோ அதேவகையில்தான் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தற்போதும் கூடாரங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாரிய அவலத்தில் மக்கள்
இவர்களுக்கான அடிப்படைவசதிகள் எனும் போது அது பாரிய அவலத்துக்குரியதாக காணப்படுகின்றன. வடிகாலமைப்புக்கள், போக்குவரத்துக்கள், சுகாதார வசதிகள் பாடசாலைகள் எனும்போது எந்த நிறைவுகளும் காணப்படவில்லை. அநேகமாக மரநிழல்களிலேயே பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.
நீண்ட தூரங்களை நடைபயணமாகவே சென்றடைய வேண்டியுள்ளது.மழை பெய்கின்ற போது இந்த நிலைமை வெகுவாக மோசமடையும் நிலையும் காணப்படுகின்றது.
சொந்த இடங்களில் குடியேறி விட்டோம் என்ற மகிழ்ச்சியை அவர்களிடத்தில் காண முடிகின்ற போதிலும், சொந்த வீடுகள் இல்லை என்பதையும் அதனை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்பதை கூறி அவர்கள் துன்பப்படுவதையும் உணரக் கூடியதாக இருக்கின்றது.
மாணவர்களுக்கான பாடநூல்கள் ஓரளவு கிடைத்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஏனைய வசதிகள் குறித்து அவர்களிடத்திலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடத்திலும் ஏக்கமே காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிவாரண நிதியைக் கொண்டு ஒருசிலர் சிறு சிறு தொழில்களை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் பெரும்பாலோர் கஷ்டப்படுகின்றனர்.
வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையிலான தொழில்கள் அவர்களுக்கு இல்லை. இங்கு பெரும்பாலும் விவசாயமே தங்களது ஜீவனோபாய தொழிலாகக் கருதப்படுகின்ற நிலையில் அதனை மேற்கொள்வதற்கான மூலப்பொருள்களையும் வளங்களையும் பெற்றுக் கொள்வதில் பெரிதும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தடுப்பு முகாமில் பிள்ளைகள் : பெற்றோர் வேதனை
இன்னும் பல பெற்றோர் தமது பிள்ளைகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கண்ணீர்மல்க தெரிவித்ததுடன் அவர்களை மீட்டுத் தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
மொத்தத்தில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அதனால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இன்னும் மீட்சியடையாதிருப்பதும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாதிருப்பதும் பெரும் கவலைக்கிடமானதாகும்.
மீள்குடியேற்றம் என்பது நியாயமானதாக அமையவில்லை. எமது மக்கள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கின்றனர். வசதிகள் வாய்ப்புக்கள் இல்லாது துன்பப்படுகின்றனர்.
இந்த நிலைமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்கிக்கொண்டுள்ளதுடன் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க விருக்கின்றது. எமது சமூகத்தின் இன்னல்களை தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. வடக்கின் மீள்குடியேற்றப் பிரதேச மக்களுடனான சந்திப்பு தொடரும் என்பதுடன் அவர்களது குறைபாடுகளையும் வெளிக்கொணர அர்ப்பணிப்புடன் செயற்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.