பக்கங்கள்

28 மே 2010

சரணடைந்த முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிங்களப்படைகளால் கொல்லப்பட்டு விட்டனரா?







முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்த விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியற் பிரமுகர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிராயுதபாணிகளாய் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த இவர்கள் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் மேலிடத்து உத்தரவுக்கமைய கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியற் துறைப் பணிகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் ஈரோஸ் இயக்கத் தலைவருமான வே.பாலகுமாரன், வரலாற்று ஆவணக் காப்பகப் பொறுப்பாளர் யோகரத்னம் யோகி, கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் இவ்வாறு கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரையின் விடுதலை தொடர்பாக அவரது சகோதரி ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்திருந்ததும் அவரது விடுதலைக்குத் தான் உதவுவதாகவும் உறுதியளித்ததாகவும் செய்தி வெளியாகியிருந்த நிலையில் இவர்கள் எவரும் எந்தவொரு தடுப்பு முகாமிலும் இல்லை என டக்ளஸ் தேவானந்தா கையை விரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் என சுமார் பத்தாயிரம் பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்த நிலையில் இந்தப் பட்டியலில் மேற்கூறிய முன்னணி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இல்லை என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.
இவ்வாறு பட்டியலில் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் என பசில் றாஜபக்ச குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
நிராயுதபாணிகளாய் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சரணடைந்த வயது முதிர்ந்த இந்தத் தலைவர்கள் என்ன காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து சிங்கள அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவது மனித உரிமை குறித்துப் பேசும் அமைப்புகளினது கடமை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
யுத்தக் கைதிகள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சாசனங்களும் விதிமுறைகளும் வெறும் ஏட்டளவில் தானா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னாள் திருமலை மாவட்டப் பொறுப்பாளர் பதுமன் விசாரணைகள் எதுவுமின்றி வெலிக்கடை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.