தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெக்ரிகாவுக்கு மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து பேசுவது, உண்மைகளை வெளிக்கொண்டு வருவது சிறந்தது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிராது பொது மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம், அரசியல் கட்சிகளிடம், சக அமைப்புக்களிடம், ஊடகங்களிடம் பேச வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே ஏதாவது நன்மைகள் விளையக்கூடும். ஏனெனில் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எல்லாஉதவிகளையும் செய்தது அமெரிக்கா என்பதை விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
அமெரிக்க அரசுக்குத் தேவையானது தமிழ் மக்களை பாதுகாப்பதல்ல, அவர்களை நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக்கி, அவர்கள் பொருள் காணி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டு தனது மூலதனத்தை விஸ்தரித்து பன்னாட்டு நிறுவனங்களை இங்கு அமைப்பதே. இந்த நிலையில் அமெரிக்க அரசை மட்டும் நம்பியிருப்பதால் த.தே.கூ.யினர் அடையப் போகும் நன்மை ஒன்றும் இல்லை. அமெரிக்க அரசின் மூலமாக மட்டும் சர்வதேச நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடாது. தமிழ் மக்களைக் கொன்றொழிக்க உதவிய அமெரிக்க அரசினதும் இலங்கை அரசினதும் உறவுகள் சுகமாகவே இருக்கின்றன. அமெரிக்கா இலங்கை மீது சில நிர்ப்பந்தங்களை விதிப்பதாகக் காட்டுவது வெறும் பம்மாத்து.
சர்வதேச சதிக்கு த.தே. கூட்டமைப்பினர் துணை போகின்றார்கள் என அரசு புலம்கிறது. இவர்களுடைய சதி வெளியே தெரிந்துவிடப் போகின்றதே என்ற அச்சமே இதற்கு காரணம். இலங்கை அரசிடம்தான் சதி இருக்கின்றதே தவிர சர்வதேசத்தில் எங்கும் சதி இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதால் இலங்கை அரசு அஞ்சவில்லை . ஏனையவர்களுடன் பேசி உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமே அரசுக்கு உள்ளது எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.