பக்கங்கள்

19 அக்டோபர் 2011

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை..ஆட்டம் கண்ட மகிந்த ராஜபக்ஸ!

அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் ஆட்டம் கண்டு போயிருக்கிறார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக் குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
அதில் முக்கியமானவர் வத்சலாதேவி. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ரமேஷின் மனைவி இவர். 'என் கணவரின் கொலைக்குக் காரணமான ராஜபக்சவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என்று நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான அழைப்பாணையை ராஜபக்ச வாங்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர், 'என் உறவினர்களை சர்வதேசப் போர் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்ச உத்தரவுப்படி அவரது இராணுவத்தினர் கொன்று குவித்து இருக்கிறார்கள். அதனால், அவரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.’ என்று அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அது தொடர்பாக, ராஜபக்சவுக்கு நீதிமன்றம் மூலமாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அதிபர் தரப்பு அழைப்பாணையை வாங்காமல் திருப்பிவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புரூஸ் பெயின், நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவு அனுப்பினாலும், அதை ராஜபக்ச அரசு மதிப்பதே கிடையாது. அந்த உத்தரவைப் பெற்றுக்கொள்வதும் கிடையாது.
அதனால், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணிப் பத்திரிகைகள் மற்றும் 'தமிழ்நெற்’ இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் இந்த நீதிமன்ற உத்தரவை வெளியிட உத்தரவிட வேண்டும். அதையே ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பாணையாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
விசாரித்த நீதிபதி கோடெல்லி, ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பாணையை இலங்கையில் இருந்து வெளிவரும் செய்தித்தாள்களிலும், இணையத்தளத்திலும் வெளியிட உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி அவை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இந்த அறிவிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ராஜபக்ச மீது இது போன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அவருக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும், இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஓர் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.
இனி எல்லா வழக்குகளிலுமே இதையே முன் உதாரணமாகக் காட்டி ராஜபக்சவுக்கு பகிரங்கமாக அழைப்பாணை வெளியிடக் கோரப்போகிறோம். அவற்றுக்கு ராஜபக்ச பதில் சொல்லியே ஆக வேண்டும்!'' என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
அமெரிக்க நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு, ராஜபக்சவின் பதவிக்கே ஆப்பு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.