2007ஆம் ஆண்டு இராணுவத்தினர் கைது செய்த தனது மகனை இன்னும் ஒரு மாதத்துக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீட்டுத் தரத் தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று குருநகரைச் சேர்ந்த தாய் நேற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
அதிகாரிகள் முன்பாக இதனை அவர் கூறும்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் சிவில் சமூகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். நகரில் உள்ள விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தாய் ஒருவர் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கடந்த நான்கு வருடங்களாகத் தனது மகனைத் தேடி அலைந்தும் பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தும் எந்தப்பதிலும் கிடைக்காத நிலையில் தான் விரக்தி அடைந்திருக்கிறார் என்று அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு எனது மகனை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றனர். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜனாதிபதி செயலகம், 4ஆம் மாடி, பூஸா தடுப்பு முகாம் என அனைத்து இடங்களுக்கும் அலைந்து விட்டேன் ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அண்மையில் பத்திரிகை ஒன்றில் எனது மகன் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம் பிரசுரமாகி இருந்தது. எனவே எனது மகன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். ஒரு மாத காலத்துக்குள் எனது மகனைக் கண்டுபிடித்துத் தராவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றார் அந்தத் தாயார்.
1996ஆம் ஆண்டு எனது மகனைப் பட்டப்பகலில் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றார்கள். யாழ். நகர் சின்னக்கடையடிச் சந்தியில் இருந்து படையினரே எனது மகனைக் கைது செய்தார்கள். ஆனால் பின்னர் எனது மகனைக் கைது செய்யவில்லை என்று மறுத்துவிட்டார்கள். எனவே எனது மகனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்”’ என்று நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு தாயார் கூறினார்.
வடக்கு கிழக்கில் போர் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் இலங்கையில் பல ஆயிரக்கணக்கானோர் காணாமற் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. 1998-99காலப் பகுதியில் மட்டும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த சுமார் 800 பேர் காணாமற்போனார்கள் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பல இடங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றி இன்னமும் தெரியவரவில்லை.
இவர்களில் ஒரு தொகுதியினர் கொலை செய்யப்பட்டு செம்மணி வெளியில் புதைக்கப்பட்டனர் என்று, கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவக் கோப்ரல் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் செம்மணிப் புதைகுழி எனப் புகழ்பெற்ற இந்த வழக்கில் காணாமற்போனவர்களின் சில உடல்களின் எச்சங்கள் செம்மணி வயல்வெளிகளில் இருந்து மீட்கப்பட்டன. எஞ்சியவர்களுக்கு என்ன ஆனது என்று இதுவரையில் தெரியவில்லை.
இதன் பின்னர் 2005-2009ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்குகிழக்குப் பகுதிகளில் மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போனார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் இல்லை. இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் தமது கண்முன்னால் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் காணாமறபோயுள்ளனர் என்று, ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவிடம் பல நூற்றுக்கணக்கானவர்கள் முறையி ட்டுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டறியும் முயற்சிகள் நடவடிக்கைகள் எவையும் அரசால் இதுவரை மேற் கொள்ளப்படவும் இல்லை.
1999ஆம் ஆண்டு ஐ.நா. மேற்கொண்ட ஆய்வில், காணாமற்போனவர்களின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பது தெரியவந்தது. இலங்கைப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற் போனவர்களின் எண்ணிக்கை 12,000 என்று அது பட்டியலிட்டது. காணாமற்போனோர் குறித்துத் தனக்குக் கிடைத்த 20,000 முறைப்பாடுகளில் 11,000 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று 2003இல் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்திருந்தது. அதன் பின்னர் காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இன்னமும் திரட்டப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.