லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கடாபியின் சொந்த இடமான சேர்ட்டில், கிளர்ச்சியாளர்களால் அவர் உயிருடன் பிடிக்கப்பட்ட போதிலும், பின்னர் இரத்தக்கறைகளுடனான அவரது சடலமே ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைகளை நடத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவைக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களின் போது கடாபி கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் பிடிக்கப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவசியமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடாபியின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள காணொளிகள் முரணானவையாக இருப்பதாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைகள் பேரவைக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முஅம்மர் கடாபியின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக லிபியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கடாபியின் மரணம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே அடக்கம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, லிபியாவில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த வருட ஆரம்பத்தில் மனித உரிமைகள் பேரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, கடாபியின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் இந்தக் கொலை தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென மனித உரிமைகள் பேரவைக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.