பக்கங்கள்

23 அக்டோபர் 2011

அவுஸ்திரேலியாவில் மகிந்தவை சிக்கலுக்குள் உள்ளாக்க திட்டம்"புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள் தள்ளி விடும் நடவடிக்கையில், அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளதாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரித்துள்ளன.
விடுதலைப் புலிகளின் கடும் பரப்புரை முயற்சிகள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த அச்சுறுத்தல்கள் இருந்தாலும், பேர்த் மாநாட்டில் பங்கேற்பதில் சிறிலங்கா அதிபர் உறுதியாக இருப்பதாக கொழும்பு வார இதழ் ஒன்று கூறியுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டின் போது எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த உலகத் தமிழர் பேரவை திட்டமிட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும், சிறிலங்கா அதிபரை பேர்த் மாநாட்டில் நெருக்கடிக்குள் சிக்க வைக்கும் நோக்கிலேயே ஏபிசி தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியுள்ளதாகவும், சிறிலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றங்களை நேரில் கண்ட சாட்சியாக ஏபிசி தொலைக்காட்சி குறிப்பிடும் கிருஸ்ணமூர்த்தி நவரஞ்சிமீனா அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற சிறிலங்காவில் பிறந்த தமிழராவார்.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என்றும் ஈழநதி என்றே புலிகள் இயக்கத்தில் அழைக்கப்பட்டதாகவும் சிறிலங்கா புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
1982இல் வல்வெட்டித்துறையில் பிறந்த இவர் அவுஸ்ரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு கல்வி கற்றதாகவும், 2004இல் ஆய்வுப் படிப்புக்காக
விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குச் சென்றதாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“மூன்றாண்டுகள் கழித்து- 2007இல் இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளி ஒருவரான குபேரனைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றவர் என்றும் 2009 மே வரையில் மாலதி படையணியில் இருந்தவர்.
சனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியமளித்த சிறிலங்காவில் பிறந்து பிரித்தானிய குடியுரிமை பெற்றவரான வாணி குமாரும் இவரும் நண்பிகள் என்றும் நம்பப்படுகிறது.
இவர்கள் இருவரும் போரின் இறுதிவரை வன்னியில் தங்கியிருந்தவர்கள் என்று தாம் நம்புவதாகவும்“ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந் ஜுன் மாதம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பப்பட்ட 40 நிமிட ஆவணப்படத்தின் பின்னால் பிரித்தானிய அரசே இருந்தாகவும் அந்த அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்துலக ஊடகங்களும் மனிதஉரிமை அமைப்புகளும் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை தமது பரப்புரைகளுக்குப் பயன்படுத்தி வருவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
“தென்னாபிரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க போராளியும் கேணல் ரமேசின் மனைவியுமான வத்சலாதேவி, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவில் வழங்குத் தாக்கல் செய்துள்ளார்.
புலிகளின் இன்னொரு முக்கிய பெண் செயற்பாட்டாளர் சாம்பவி அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் முக்கியமான ஒருவராக செயற்பட்டு வருகிறார். கிறீன் கட்சியுடனான சந்திப்பில் இவரே அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச, பாலித கொகன்ன, அட்மிரல் திசார சமரசிங்க, போன்றோருக்கு எதிராக அவுஸ்ரேலிய ஊடகங்கள் மீனாவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன“ என்றும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
இராசரத்தினம் தயாகரன் என்ற குபேரனின் மனைவியே மீனா என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு இனம்கண்டுள்ளது.
“இவர் 1992இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இம்ரான் பாண்டியன் படைப்பிரிவில் பணியாற்றியுள்ளார்.
மீனாவும், வேறு தெரிவுசெய்யப்பட்ட போராளிகளும் சட்டத்துறை சார்ந்த பயிற்சிக்காக தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
மீனாவின் கணவரான தயாகரன் தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க்கிற்கு 2003 நவம்பரில் புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டு டிசம்பரில் திரும்பியிருந்தார்.
மாலதி படையணியில் பணியாற்றிய மீனா நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவர் என்பதால், காஸ்ரோவின் தலைமையிலான அனைத்துலக பிரிவுடனும் செயற்பட்டு வந்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் வவுனியாவுக்குத் தப்பிச் சென்ற இவர் இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்தார்.
இவரது கணவரான குபேரன் என்ற விடுதலைப் புலிகளின முக்கிய உறுப்பினர் 2009 மே 16ம் நாள் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் இராணுவப் புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.