பக்கங்கள்

26 அக்டோபர் 2011

தந்தையை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு தயாராக இருந்த குழந்தை மரணம்!

தந்தை யார் என்பதை அறிவதற்காக மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருந்த 6 மாதக் குழந்தை ஒன்று திடீரென யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதடி அரச சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தையின் தந் தையை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. எனப்படும் மரபணுச் சோதனைக்கான கலங்கள் குழந்தையிடம் இருந்தும் சந்தேக நபரிடம் இருந்தும் நேற்று திங்கட்கிழமை எடுக்கப்பட இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென உயிரிழந்தது.
அச்சுவேலியைச் சேர்ந்த 21 வயது திருமணமாகாத இளம் பெண் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
எனினும் அவர் அக்குழந்தையைப் பராமரிப்பதற்கு விரும்பம் தெரிவிக்காததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை கைதடி அரசினர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிற்றூழியராகப் பணியாற்றும் நபர் ஒருவரே இந்தக் குழந்தையின் தந்தை என்று அதன் தாய் கூறுகிறார். ஆனால், குறித்த சிற்றூழியர் அதனை அடியோடு மறுக்கிறார். இதனை அடுத்தே சந்தேகநபர் குழந்தையின் தந்தையா? என்பதைக் கண்டறிய மரபணுப் பரிசோதனை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காதலித்து, கர்ப்பமாக்கிய பின்னர் ஏமாற்றிக் கைவிட்டார் என்று சந்தேகநபருக்கு எதிராக நன்னடத்தை அதிகாரிகளின் உதவியுடன் அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திடீரென நோய் வாய்ப்பட்டு எப்படி இறந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குழந்தையின் சடலம் போதனா வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு முன்னர் விசாரணைகளை வைத்திய சாலை சட்ட மருத்துவ அதிகாரி மேற் கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.