கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெகிவளை-கல்கிசை தேர்தல்களிலே ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்பி வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களது வெற்றியை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது. நாம் பெறப்போகும் வெற்றி இந்த தமிழர் விரோத சர்வாதிகார அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முகமாக தென்னிலங்கையிலே பாரிய எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கு வித்திடுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் இறுதி பிரசாரக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 5ம் திகதி புதன் கிழமை இரவு 11.00 மணிக்கு மட்டக்குளியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த அரசாங்கம் தமிழருக்கு எதிரான கோரப்போரை நடத்தி முடித்திருக்கின்றது. புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லப்பட்டாலும், அது தமிழ் மக்களுக்கு எதிரான போராகவே நடத்தப்பட்டது. இந்த போரை நடத்துவதில் அவசரத்தையும், அக்கறையையும் காட்டிய இந்த அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காலத்தை கடத்திகொண்டிருக்கின்றது. தமிழர்களை அறுபது வருடகாலமாக கொழும்பு அரசாங்கங்கள்; ஏமாற்றிவந்துள்ளன. இவ்வரிசையில் முதன்மை வகிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் தற்போது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் தலைவர்களை ஏமாற்றியதை போல் இந்திய மற்றும் அமெரிக்க தலைவர்களையும் இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக ஏமாற்றப்போகின்றதா, இல்லையா என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிந்துகொள்ளலாம்.
ஏனெனில் இந்த அரசாங்கம் இன்னும் மூன்று மாதத்திற்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை கண்டேயாகவேண்டும். இந்த உண்மைகள் இன்றைய அரசாங்கத்திற்கு துதிப்பாடும் சில ஞானசூன்யங்களுக்கு தெரியாது.
அதேபோல் இன்றைய ஆட்சியாளரை வெளிநாட்டு அழுத்தங்களால் மாத்திரம் உள்நாட்டில் தோற்கடிக்க முடியாது. அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றால் பாரிய எதிர்கட்சி கூட்டணி ஏற்படுத்தப்படவேண்டும். இன்றைய ஐதேகவின் தலைமை இதற்கு தயார் இல்லை. இன்னும் நீண்ட நெடுங்காலத்திற்கு நிரந்தர எதிர்கட்சியாகவே இருப்பதற்கே இவர்கள் விரும்புகின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க நல்ல மனிதர். ஆனால் அவரை சுற்றி இருக்கும் பலருக்கு தனிப்பட்ட நிகழ்சி நிரல்கள் இருக்கின்றன. எனவே இன்றைய அரசாங்கத்தை வீழ்த்த விரும்பாத இந்த பலவீனமான எதிர்கட்சிக்கு எங்கள் மக்களின் வாக்குகளை நிபந்தனையில்லாமல் வாங்கிக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. அதேபோல் நாளை மாநகரசபையின் மேயராக மாறிவிட்டு பின்னர் ஆளுங்கட்சிக்கு தாவுவதற்கு திட்டம்போட்டு வைத்திருப்போருக்கு எமது மக்களின் வாக்குகளை வாங்கிக்கொடுப்பதற்கும் நாம் தயாராக இல்லை. இதனால்தான் இவர்களுக்கு என்மீது கோபம். என்னைப்பற்றிய பொய்யான வதந்திகளையெல்லாம் இவர்கள் இன்று பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை ஆதரிக்காது என்று இவர்கள் சொன்னார்கள். இவர்களது மேயர் வேட்பாளர்களும், இன்னும் இரண்டு தமிழ் தேசியப்பட்டியல் அரசியல்வாதிகளும் கூட்டமைப்பு தங்களையே ஆதரிக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவரின் கருத்தை திரித்து பேசினார்கள். இதோ இப்போது கூட்டமைப்பு எங்களை ஆதரித்துவிட்டது. எனவே இதுபற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தாங்கள் பேசிய வார்த்தைகளை தாங்களே தற்போது விழுங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. எங்களுக்கும், கூட்டமைப்பிற்கும் இருக்கின்ற உறவு உணர்வுப்பூர்வமானது. இதை புரிந்துகொள்வதற்கு இத்தகைய பெரும்பான்மை கட்சிகளுடன் சங்கமமாகிவிட்டவர்களுக்கு தெரியாது. எனவே இவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.