பக்கங்கள்

20 அக்டோபர் 2011

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்து!

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று "சட்டநிபுணர்களுக்கான சர்வதேச ஆணையத்தின் ஆஸ்திரேலியக் கிளை' கோரியுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக கான்பெராவுக்கான இலங்கைத் தூதர் திசாரா சமரசிங்கவை விசாரிக்க ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ் தயாராகி வரும் நிலையில் மேற்கண்ட கோரிக்கை எழுந்துள்ளது.
மனித உரிமைகள் விஷயத்தில் காமன்வெல்த்துக்கு ஏதேனும் அக்கறை இருக்குமெனில், அது தன் உறுப்பு நாடுகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்று சட்டநிபுணர்களுக்கான சர்வதேச ஆணையத்தின் ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் ஜான் டவுட் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இம்மாதம் 28 முதல் 30-ம் தேதிவரை பெர்த்தில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் கூட்டத்திலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
ஐ.நா.வின் நிபுணர் குழு பரிந்துரைகளின்படியோ அல்லது போர்க்குற்ற டிரிப்யூனல் கூறியுள்ளதற்கு ஏற்பவோ இலங்கை தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வரை அந்நாட்டை காமன்வெல்த்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.
இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கையாகும் என்று ஜான் டவுட் கூறினார். காமன்வெல்த் அமைப்பில் இலங்கை உள்பட 54 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதனிடையே, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கான இரண்டாம்நிலை இலங்கைத் தூதரான ஜகத் டயஸ் மீது வந்துள்ள போர்க்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப் போவதாக சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளவும் மருத்துவமனைகளை பீரங்கிகளால் தகர்க்கவும் உத்தரவிட்டதாக டயஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொழும்புவுக்கு திரும்பி அழைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.