தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயத்தின் போது கூட்டணி கட்சியான ரெலோவை சேர்ந்த எந்தவொரு உறுப்பினருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கூட்டணிக்குள் அதிருப்தி நிலை உருவாகி உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
செல்வம் அடைக்கலநாதன், விநோதரலிங்கம் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் ரெலோ முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றனர்.
அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்கா செல்லும் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அமெரிக்க ராஜாங்கச் செயலளார் ஹிலரி கிளின்ரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை தமது நிகழ்ச்சி நிரலில் உருத்திரகுமாரனை சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.