யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன.
மண்டைதீவு காரைநகர் மற்றும் அராலி பகுதிகளை உள்ளடக்கி இந்த இறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.கடற்கரைகளை உள்ளடக்கியே இவ்விறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்ற போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அரச காணிகளென அதிகாரிகள் கூறிவருகின்றனர். அத்துடன் நிலத்தடி நீர் உவர் நீர் ஆகிவருவதை தடுக்கும் நடவடிக்கையாக உருவாக்கப்பட்டு வரும் மண் அணை தடுப்பே இறால் பண்ணைகள் அமையும் இடமெனவும் அவர்கள் மேலும் கூறிவருகின்றனர்.
எனினும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவே இறால் பண்ணைகள் அமைக்கப்படுவதான செய்திகளை உள்ளுர் வாசிகள் நம்புவதற்கு தயாராக இல்லை. இப்பண்ணைகள் தெற்கை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படலாமென மீனவ அமைப்புக்களும் சந்தேகம் கொண்டுள்ளன. ஏற்கனவே இறால் மற்றும் சங்கு பிடிக்கவென ஆயிரக்கணக்கான தெற்கு சிங்கள மீனவர்கள் வடக்கிற்கு படையெடுத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் இவ்விறால் பண்ணையும் தெற்கு சிங்கள மீனவர்களுக்கான பண்ணைகளாகலாமென உள்ளுர் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.