பக்கங்கள்

09 அக்டோபர் 2011

பாரதலக்ஷ்மன் கொலைக்கு மகிந்தவே பொறுப்பேற்க வேண்டும்!

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பொறுப்பேற்க வேண்டுமென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையாளருமான துமிந்த சில்வாவின் குழுவினருக்கும் ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் சிரேஸ் தலைவர்களில் ஒருவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் குழுவினருக்கும் இடையில் நேற்று மாலை பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான முல்லேரியா, சிரிமாவோ பண்டாரநாயக்க நூலகத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் ஆதரவாளரான பிசன்ன சோலங்கராச்சியின் வீட்டிற்கு துமிந்த சில்வா தனது பாதாள உலகக் குழுவினருடன் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனை அறிந்துகொண்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உடனடியாக தனது ஆதரவாளர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது இடைநடுவில், துமிந்த சில்வாவும், பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உத்தரவிற்கமைய, உடனடியாக செயல்பட்ட அவரது பாதாள உலகக் குழுவினரில் ஒருவர் பாரத லக்ஸ்மன் மீதும், அவரது பாதுகாவலர் மீதும் முதன்முதலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவுடன் இருந்த குழுவினர் அங்கிருந்து அகன்றுச் செல்ல முயற்சித்த போது, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு துமிந்த சில்வா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து துமிந்த சில்வாவின் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை விரட்டிச் சென்று அவர் மீது ஏழு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஸ்தலத்திலேயே பாரத லக்ஸ்மன் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் துமிந்த சில்வா மீதும், அவரது பாதாள உலகக் குழுவினர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சில நொடிப்பொழுதில் நிலைமை பதற்றமாக, இரு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரத லக்ஸ்மனின் மெய்ப் பாதுகாவலர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் அவரது ஆதரவாளர்களும் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துமிந்த சில்வா எம்.பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் வைத்தியசாலைக்கு வந்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, எவ்வகையிலாவது துமிந்த சில்வாவின் உயிரைக் காப்பாற்றித் தருமாறு மருத்துவர்களிடம் கோரியுள்ளார்.
துமிந்த சில்வாவின் நிலைமை குறித்து அறிந்துகொள்ள வைத்தியசாலையுடன் தொடர்ந்துகொண்ட போது, அவரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த காலத்தில், மகிந்த ராஜபக்‌ஷவிற்கு சார்பாக அந்நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் பகிரங்கமாக முறுகல்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ் பிரமேச்சந்திர என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், பாரத லக்ஸ்மன் வகித்துவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொரல்லை தொகுதி அமைப்பாளர் பதவியை பறித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவருக்கு கொலன்னாவை தொகுதியை வழங்குவதாக உறுதியளித்த போதிலும் இறுதிவரை அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவிய துமிந்த சில்வாவிற்கு கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே, கொலன்னாவ தொகுதியிலிருந்த பாரத லக்ஸ்மனின் முக்கிய ஆதரவாளர்களை துமிந்த சில்வாவும், அவரது பாதாள உலகக் குழுவினரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, துமிந்த சில்வாவிற்கு சாதகமான தீர்மானங்களையே எடுத்ததாகவும், இதனால் பாரத லக்ஸ்மன் நொடிந்துபோயிருந்ததாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
துமிந்த சில்வாவிற்கும், பாரத லக்ஸமனுக்கும் இடையே அண்மைக்காலமாக இந்த மோதல் அதிகரித்திருந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் ஆதரவான பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர்கள் சிலர் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட செய்தி கேட்டு வைத்தியசாலைக்கு விரைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், இந்தக் கொலைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும் என ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.