அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தமையை எதிர்த்துத் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவசர காலச் சட்டத்தின் கீழ் இருந்த ஐந்து விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. இதனை எதிர்த்துத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை சேனாதிராசா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நேற்றுமுன்தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை நிராகரித்தனர். குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத் திற்கோ உட்பட்டவை அல்லவென பிரதி சொலி சிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னான்டோ தெரி வித்ததை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர்.
இவ்வாறு தமது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. தமது தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு இடமளிக்கப்படாததுடன் நியாயம் பெறக் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று கருதும் கூட்டமைப்பு அதற்கு எதிராகவே ஐ.நாவை நாட உள்ளது.
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அதற்கு எதிராகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதே ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் பணி.
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் சார்பில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கையெழுத்திட்டுள்ளார்.
எனவே அந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு இலங்கை நடக்கவேண்டும். இந்த உடன்படிக்கையானது ஐ.நாவின் அடிப்படை உரிமைகள் தொடர்பான வரையறைகளைப் பாதுகாப்பது. இதில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு நாட்டின் குடிமகனோ அல்லது அரசுகளோ உடன்படிக்கையின் சரத்துக்கறை மீறினால் அதற்கு எதிராக முறையிடமுடியும்.
ராவய சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் நல்லரத்தினம் சிங்கராஜர் என்ற நபருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும் ஏற்கனவே இந்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிடப்பட்டிருந்தது.
அதனை விசாரித்த குழு உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்புக்கள் தவறானவை என்று அறிவித்ததுடன் 3 மாதகாலத்துக்குள் அந்த வழக்குகளை விசாரித்து உடனடியாக சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் முடிவை இலங்கை செயற்படுத்தவில்லை. அதனைச் செயற்படுத்தாதமை குறித்து ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, குறித்த சர்வதேச உடன்படிக்கையில் தனிநபரான சந்திரிகா குமாரதுங்க கையெழுத்திட்டமை இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது என்று அறிவித்தார். அவர் கையெழுத்திட்டதை ஏற்றுக்கொண்டு அந்த உடன்படிக்கையை இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே அது நாட்டுக்குள் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே தமது மனு மீதான தீர்ப்பை எதிர்த்து ஐ.நா. மனித உரிமைகள் குழுவிடம் தமிழ்க் கூட்டமைப்பு முறையிட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.