மூவர் தூக்குத் தண்டனை தொடர்பாக ஜெயலலிதா திடீர் பல்டியடித்திருப்பது தமிழார்வலர்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களது கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்துசெய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 3 பேரின் தூக்கு தண்டனையும் இரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் "கருத்துகூற விரும்பவில்லை' என்பதே தமிழக அரசின் பதிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால்கூட பரவாயில்லை. பதில்மனுவின் கடைசி பகுதியில், தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அதாவது இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது. மூவரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோதுஅதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்தது. அவர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினோம். முதலில் தயங்கினாலும் பின்னர் எங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால், உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதன்மூலம் மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் தமிழக முதல்வருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக்கூடாது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய முதலமைச்சர், அதில் உறுதியாக இருக்கவேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இதே போன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, 3 உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கொண்டாடும். இல்லாவிட்டால் தமிழர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்படும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.