பக்கங்கள்

03 அக்டோபர் 2011

தமிழர்களை வைத்தே தமிழர்களை அடிக்கும் ரணில்!

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சின்னா பின்னமாக்கி அதன் மூலம் கொழும்பு மாநகர சபைக்கான தமிழர் பிரதிநிதித்துவத்தைச் சிதறடிக்கச் செய்யும் முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் ஈழநாதம் இணையத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் செயற்படுவது கொழும்பு மாநகர சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்காகவே ஆகும். கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன் மூலம் தமிழர் விரோத பிரசாரங்களை மேற்கொள்ளச் செய்திருந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சுவாமிநாதன் ஊடாக அதனைச் செய்து வருகிறார். இதன் மூலம் ரணில், தமிழர்களை வைத்தே தமிழர்களைப் பலவீனப்படுத்தி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை கொழும்பு மாநகர சபையில் இல்லாமல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என கூறினார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிப்பதாக வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்காது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடதத்க்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.