லண்டனில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு குரொய்டன் பகுதியில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றிக்கு அவர் சென்றிருந்த வேளை இச் சம்பவம் நடந்துள்ளது. விழா நடந்த மண்டபத்துக்கு வெளியே நின்ற சில ஆபிரிக்க நாட்டவர்கள் கற்களை வீசியதால் வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்ற குறித்த நபரை ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அதிக ரத்தப்பெருக்கால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர் கந்தசாமி அகிலகுமார் என்று அறியப்படுகிறது. யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலகுமார் 9மாதக் குழந்தையின் தந்தையாவார்.
29 வயதாகும் அகிலகுமாரை ஏன் அவர்கள் கத்தியால் குத்தினார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை குரொய்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்காக நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவருபவருமான சோஃபியன் மக்டொனா தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இது ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு என்றும் குற்றவாளிகளை பொலிசார் விரைவில் கைதுசெய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இச் சம்பவம் குறித்து தமிழ் மக்களுடன் தான் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் மற்றும் நடந்த இச் சம்பவம் குறித்து மேலும் ஆரயவும் அவர் வரும் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தைக் கூட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டம் குரொய்டனில் நடைபெறவுள்ளது என்றும் நடைபெறும் இடத்தை தாம் பின்னர் அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொலைசெய்யப்பட்ட அகிலகுமார் ஆத்மசாந்திக்கு எமது இணையமும் வாசகர்களும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.