மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் வருடா வருடம் நடைபெற்றுவந்த பலி பூசை எனப்படும் மிருகங்களை உயிர்ப்பலியிடும் நிகழ்வினை இம்முறை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்துக் கோயில்களில் மிருகங்களை உயிர்ப்பலியிடும் சம்பவங்களை கடுமையாக எதிர்த்து வரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கடந்த காலங்களில் பாராளுமன்றத்திலும் விவாதித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே முன்னேஸ்வரம் போன்ற பல ஆலயங்களில் உயிர்பலியிடுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உயிர்ப்பலியிடும் நிகழ்வுகளை தடுத்துவரும் யோகேஸ்வரன் அவர்கள் அதற்கு எடுத்துக்காட்டாக இம்முறை அவரது தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தில் மிருகங்களை உயிர்ப்பலியிடும் நிகழ்வைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதேநேரம் புதன்கிழமை இவ்வாலயத்தின் சடங்கு உற்சவத்தை திரு.சீ.யோகேஸ்வரன் அவர்கள் தலைமைதாங்கி நடத்தியதுடன் அன்றைய தினம் நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வுகளில். பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், அன்றைய தினம் நடைபெற்ற யாகபூசை நிகழ்வில் பல இந்துக் குருமார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.