பக்கங்கள்

15 அக்டோபர் 2011

தொல்பொருளை சாட்டாக வைத்து சிங்களவர்கள் வாழ்ந்ததாக கூறமுடியாது!

தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் 400 இடங்களை அடையாளமிட்டுள்ளது. இது தொடர்பாக, புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதும், இல்லாத இடங்களில் தொல்பொருள் இருப்பதாகக் காட்டுவதையும் நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். அதற்காக முற்றுமுழுதாக அப்படி ஒரு விடயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் எனது சொந்த பிரதேசமான கந்தரோடையிலும் பௌத்த சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த பௌத்தர்கள் நிச்சயமாக சிங்களவர்கள் அல்ல.
சரித்திர ரீதியாகப் பார்க்கின்றபொழுது அவர்கள் தமிழர்கள். அந்தக் காலத்தில் பல தமிழர்கள் பௌத்தர்களாக இருந்திருக்கின்றனர். எனவே சிங்களவர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்று கூறுவதற்கு அதனை சான்றாகக் கொள்ளமுடியாது. இந்த ரீதியில் 400 இடங்களில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று பொய்கூறி உலகை நம்பவைப்பது பாரிய துரோகமாகும். இதன்மூலம் அந்த இடம் தமக்கு சொந்தம் என்றுகூறி இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி எம்மை மேலும் பலவீனமாக்கும் செயற்பாட்டையே இந்த அரசு மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.