பக்கங்கள்

28 அக்டோபர் 2011

மகிந்த சிறையில் இருக்க வேண்டியவர்,அவர் திரும்பிபோக அனுமதிக்கக் கூடாது!அவுஸ்ரேலியாவில் தமிழர்கள் போர்க்கொடி.

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற தமிழர் கோரியதாக ஏஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சவுக்கு அவுஸ்ரேலியாவில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது- ஆனால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற யோகன் தர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் அல்ல- முள்ளுக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர் என்று போராட்டத்தில் அவர் முழக்கமிட்டதாக ஏஏபி குறிப்பிட்டுள்ளது.
தயவுசெய்து அவுஸ்ரேலியா அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் திரும்பிப் போக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 79பேரை இழந்துள்ளதாகவும் யோகன் தர்மா கூறியுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்ற அஜந்தி என்ற பெண், சிறிலங்காவில் பெருமெடுப்பில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவை கொமன்வெல்த்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு எமக்குத் தேவை அவுஸ்ரேலியாவின் ஆதரவே, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பேர்த் நகரில் வாழும் 60 இற்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றதாகவும் ஏஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.