பக்கங்கள்

10 அக்டோபர் 2011

கட்சிக்கு கிடைத்ததை விடவும் மனோவிற்கு கிடைத்த விருப்பு வாக்குகள் அதிகம்!

கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகள் பற்றிய விபரத்தை சிறிலங்கா தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.ஐதேக சார்பில் மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏ.ஜே.எம். முசம்மில் 55,448 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரை அடுத்து கிருசன் ஜோன் ராம் 9966 வாக்குகள் பெற்று இரண்டாது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனுக்கு 28,433 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.
ஆனால் இந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் கிடைத்த மொத்த வாக்குகள் 26,229 மட்டுமேயாகும்.ஆனாலும் விருப்பு வாக்குகள் மனோ கணேசனுக்கு 28,433 கிடைத்ததாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன், எஸ்.குகவரதன், குருசாமி நளன்ராஜ் தேவன், தங்கேஸ் வர்கீசன், எஸ்.பாஸ்கரன், லோறன்ஸ் பெர்னான்டோ ஆகியோர் கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐதேக சார்பில் 2 தமிழர்கள், 9 முஸ்லிம்கள், 13 சிங்களவர்கள் என 24 உறுப்பினர்கள் கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியில் நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் 32,103 வாக்குகளையே பெறமுடிந்துள்ளது.
ஆளும்கட்சியின் சார்பில் கொழும்பு மாநகரசபைக்கு தமிழர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகரசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 6 முஸ்லிம்களும் 10 சிங்களவர்களும் தெரிவாகியுள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் 6 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபையில் இம்முறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் 8 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளை 27 சிங்களவர்களும், 18 முஸ்லிம்களும் இம்முறை கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தெகிவளை- கல்கிசை மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண 2171 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.