மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வெள்ளாம் முள்ளிவாய்க்கால் (முள்ளிவாய்க்கால் கிழக்கு) பகுதியில் தமது பொருட்களை மீட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் எண்மர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதன் போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட மக்கள் இருவரை ஏனைய மக்கள் மீட்ட பரபரப்புச் சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முள்ளிவாய்க்கால் கிழக்கின் நந்திக்கடல் பக்கமான விடத்தல் காட்டுப் பகுதியில் போர்க்காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தற்காலிகமாக குடியமர்ந்திருந்தனர். போர் தீவிரம் பெற்று இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலை ஏற்பட்டபோது அங்கிருந்த மக்கள் தமது பொருட்களை தாம் இருந்த பகுதிகளிலேயே புதைத்துவிட்டுச் சென்றிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு மக்கள் செல்வதற்கு கடந்த சில வாரத்திற்கு முன்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதன் அடிப்படையில் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தமது பொருட்களை மீட்டு வருகின்றனர். அதேவேளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் இரும்பு சேகரித்து அவற்றினை தென்னிலங்கையில் இருந்து அங்கு செல்கின்ற முஸ்லிம் மற்றும் சிங்கள வியாபாரிகளிற்கு விற்றும் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தப் பகுதிக்குச் செல்லவேண்டாம் என்று இராணுவத்தினர் திடீரென மறித்துள்ளதுடன் அங்கிருக்கும் பொருட்களை தமக்கு நெருக்கமானவர்கள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதித்திருக்கின்றனர். இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும் மக்கள் பொருட்களை எடுக்க முற்பட்டே வருகின்றனர். இந் நிலையில் நேற்று முற்பகல் அந்தப் பகுதியில் மக்கள் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த போது, இராணுவத்தினர் எண்மர் கைகளில் இரும்புகள், கொட்டன் தடிகளுடன் அங்கு சென்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அவ்வாறு தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மக்கள் சிதறி ஓடியிருக்கின்றனர். இருப்பினும் அவர்களில் இருவரை மடக்கிப்பிடித்த இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் கட்டிவைத்துத் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் அபயக்குரல் எழுப்பியிருக்கின்றனர். அதன் போது அங்கு நின்றிருந்த வயோதிபப் பெண் ஒருவர், நீங்கள் ஆம்பிளையள் இல்லையா? அந்தப் பிள்ளைகளை இராணுவம் அடித்துக் கொல்லப்போகின்றது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என மக்களைப் பார்த்துக் கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கிடைத்த பொருட்களுடன் இராணுவத்தினரை நோக்கிச் சென்றிருக்கின்றனர். அவர்களின் பின்னால் பெண்கள், சிறுவர்களும் திரண்டிருக்கின்றனர். பலநூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இராணுவத்தினர் மீது துணிகரமாகத் தாக்குதல் நடத்தி, இராணுவத்தினரால் கட்டப்பட்டு தாக்கப்பட்டுக்கொண்டிருந்த இருவரையும் மீட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதன் பின்னர் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் அங்கு இரும்பு கொள்வனவிற்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர்களைத் தாக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.