பக்கங்கள்

15 அக்டோபர் 2012

லண்டனில் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்!

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும், களப்பலியான முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும், நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தனர். திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தமது உரையில் பெரும் தோல்வியில் முடிவுற்ற நோர்வேயின் சமாதான ஓப்பந்தத்தில் அனுசரணையாளராகவிருந்த எரிக் சூல்கெய்ம் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகளையிட்டான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன், எத்தகைய அழுத்தங்கள் வரினும் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார். தேசிய செயற்பாட்டளார் கவிஞர் திரு. கந்தையா இராஜமனோகரன் அவர்கள் பேதுரு சகாயசீலி என்ற இயற்பெயர் கொண்ட 2ம் லெப்ரினன்ற் மாலதி அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்ததுடன், இந்திய அரசு காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த அநீதிகள் பற்றியும் விளக்கினார். லண்டனில் இம்முறை மாவீரர்நாள் நிகழ்ச்சி வழமைபோல் எக்செல் மண்டபத்தில் நடைபெறவிருப்பதனையும் அறிவித்தார். திருமதி சுகி கோபிரத்னம் அவர்கள் சமகால நிகழ்வுகள் பற்றி தனது பார்வை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தியதுடன். ஈழத்தமிழ் மக்களாகிய நாம் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எமது அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்காமல் எமது அரசியல் அபிலாசைகளை அடைவதை நோக்காக் கொண்டு செயற்படவேண்டும் என வலிறுத்திக் கூறினார். மேற்கு லண்டன் பெண்கள் அமைப்பினரின் வில்லுப்பாட்டு உட்பட பல கலைநிகழ்சிகளும் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.