அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பரபரப்புக் கருத்தை வெளியிட்டிருந்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தவார நடுப்பகுதியில் இந்தியா செல்லவுள்ளார்.
புதுடில்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் கோத்தபாய முக்கிய பேச்சு களை நடத்துவாரென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கமளித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பாதுகாப்புச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெறுவதாகத் தெரிகிறது.
13ஆவது திருத்தத்தினை ரத்துச் செய்வது தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தான இந்திய மத்திய அரசின் கோரிக்கை, வடபகுதியில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பது போன்ற விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் ஆராய்வார் என்று உயர்மட்ட இந்திய இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.எதிர்வரும் புதன்கிழமையளவில் கோத்தபாய இந்தியா செல்வாரென தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.