சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது மேற் கொள்ளப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கையை ஐ.நா மறைத்துவிட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை நியமித்து, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.
எனினும், தொராயா, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி குறித்த பணிக்கு நியமிக்கப்பட்டார். அவரும், குறிக்கப்பட்ட கால எல்லையைக் கடந்து, 9 மாதங்களாகியும் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாதுள்ளது.
"இலங்கை இறுதிப் போரின்போது, ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சார்ள்ஸ் பெற்றி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்க்கி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படாதுள்ள நிலையில், அது மறைக்கப்பட்டு விட்டதா? எனவும் அது கேள்வியெழுப்பியுள்ளது.
இதனிடையே, இந்த அறிக்கையைத் தயார் செய்ய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணாக, ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.