தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள்.
அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள்.
இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.