மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் அநீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று குற்றஞ்சாட்டினார்.
திவிநெகும சட்ட மூலத் திற்கு அங்கீகாரம் வழங்கி கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே மேற் கண்டவாறு குறிப்பிட்ட சம் பந்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது.
கிழக்கு மாகாணசபையில் நண்பகலுக்கு முன்னர்வரை "திவிநெகும' சட்டமூலத்தை விமர்சித்துப் பேசிவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண உறுப்பினர்கள் நண்பகலுக்குப் பின்னர் இதற்கு ஆதரவாகப் பேசத் துணிந்ததன் பின்னணி என்ன?
மாகாணசபையில் விவாதத்தை சில தினங்களுக்காவது ஒத்திவைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கேட்டபோதும் அவை கணக்கில்கூட எடுக்கப்படவில்லை. ஒரு பிரேரணையை ஒத்திவைக்கக்கூட அனுமதிபெற முடியாத மு.கா. எப்படி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகிறது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்களை நம்பி வாக்களித்த மக்களை கைவிட்டாலும், நாங்கள் எமது முஸ்லிம் சகோதரர்களைக் கைவிடமாட்டோம்.
நாங்கள் எவரிடமும் விலைபோகமாட்டோம் மண்டியிடமாட்டோம் அடிபணியமாட்டோம். முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக பதவிகளுக்காக மண்டியிட்டாலும் உரிமைகளைப் பெறும் விடயத்தில் முஸ்லிம் மக்களை நாங்கள் எவரிடமும் மண்டியிடவிடமாட்டோம்.
முஸ்லிம் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்பதை முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்தாலும், நாங்கள் முதுகெலும்புடன் இருந்து அந்த மக்களுக்காகப் பேசுவோம். முஸ்லிம் மக்களுடன் பேசுவதற்கு அவர்களுக்காகப் பேசுவதற்கு எமக்கு எவரினதும் அனுமதி தேவையில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது வழிமாறிப்போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் அவர்கள் சரியான பாதைக்கு வருவார்கள். இவ்வாறு குறிப்பிட்டார் சம்பந்தன் எம்.பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.