முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆனந்தபுரம் என்னுமிடத்தில் குண்டொன்று வெடித்ததில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள பச்சை புல்மோட்டை என்னுமிடத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றிருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
இந்தப் பகுதியில் மீள்குடியேறியுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் தனது காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் மரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின்போது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த 28 வயதான அவரது மற்றுமொரு சகோதரி, சிதறிச் சென்ற குண்டின் பாகம் ஒன்று தாக்கியதில் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அயலவரான பெண் ஒருவர் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், உயிரிழந்த சிறுமி மண்ணில் கொத்திய அடையாளத்துடன் கிடந்த கத்தி ஒன்றைக் கண்டெடுத்துள்ளதுடன், இந்தக் கத்தியினால் பொருள் ஒன்றை கொத்தியபோதே குறித்த குண்டு வெடித்திருக்க வேண்டும் என்று ஊகம் தெரிவித்திருப்பதாக அயலவர்கள் கூறுகின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பல கிராமங்களில் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டிச் சுத்தம் செய்யும்போது பொது மக்களால் கண்டெடுக்கப்படுகின்ற பல வகையான வெடிப்பொருட்களை இராணுவத்தினர் அகற்றிச் செல்வதாகவும், இதனால் தமது வாழ்க்கை ஆபத்து மிக்கதாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.
ஒரு சிறுமியை பலிகொண்டுள்ள இந்தச் சம்பவம் வெடிப்பொருட்கள் தொடர்பான மக்களின் அச்ச உணர்வை மேலும் அதிகரித்திருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.