பக்கங்கள்

19 அக்டோபர் 2012

படையினரை கொன்றதாக குற்றப்பத்திரிகை தாக்கல்!

வில்பத்து வனத்தின் கொட்டகச்சி என்ற பிரதேசத்தில் சாலியபுர இராணுவ முகாமில் கட்டளை அதிகாரி  லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரை கைக்குண்டு வீசி தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த இரண்டு விடுதலைப்புலிகள்  சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில், புலிகளின் முக்கிய உறுப்பினர்களான எஸ்.ஜே. என்ற உதயன், ஐயன் அல்லது சிவலிங்கம் என அழைக்கப்படும் சிவபிரகாஷ் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு  எதிராக 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன், தாம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாளிகள் அல்ல என சந்தேக நபர்கள் தெரிவித்தனர். 2007 மார்ச் 09 திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், வில்பத்து தேசிய வன பகுதியில் கடமையின் நிமித்தம் ஜீப் வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர, மேஜர் விஜேரத்ன, இராணுவப் சிப்பாய்களான கபில குமார, சுரங்க ஆகியோர் கொட்டக்கச்சி பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி கசுன் பொன்னப்பெரு ஆஜராகியிருந்தார். மேற்படி சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.