பக்கங்கள்

17 அக்டோபர் 2012

தெரிவுக்குழு பொய்யானது; நிரூபித்தது கோத்தா கூற்று –ஐ.தே.க

“தீர்வு விடயத்தில் அரசின் உள்மனதில் இருக்கும் நிலைப்பாட்டையே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். எனவே 13 ஆவது திருத்தத்தையே வழங்கத் தயாரில்லாத இந்த அரசை நம்பி கூட்டமைப்பும், நாமும் எந்த அடிப்படையில் தெரிவுக்குழுவுக்குச் செல்வது?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல. 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்கவேண்டும் என பாதுகாப்புச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியவை வருமாறு: 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை முன்வைக்கத் தயார் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடமும், ஐ.நா.செயலாளரிடமும் அரசு உறுதியளித்துள்ளது. அத்துடன், 13 பிளஸ் என இந்தியாவிடமும் அது கூறியுள்ளது. ஆனால், அரச அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷ 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும எனக் கூறுகின்றார். தமிழர் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு எதுவும் இல்லை என்பதையே அவரின் கூற்று பிரதிபலிக்கின்றது. தீர்வு விடயத்தில் அரசின் உள் மனதில் உள்ள நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரச அதிகாரியாக இருந்துகொண்டு வரம்பு மீறி செயற்பட்டாலும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலைமையே நாட்டில் உள்ளது. ராஜபக்ஷ குடும்பம் என்ற அதிகாரம் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது. அதேவேளை, அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எட்டப்படும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் பிரதான எதிர்க்கட்சியினராகிய நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனப் பகிரங்கமாகவே அறிவித்துள்ளோம். எனினும், தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசு தெரிவுக்குழு கைங்கரியத்தைக் கையாள்கின்றது. கோட்டாவின் கூற்று இதையே அம்பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அத்துடன், தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையும் இதன்மூலம் அற்றுள்ளது. எனவே, 13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் தீர்வை வழங்கவே தயாரில்லாத இந்த அரசை நம்பி நாம் எப்படித் தெரிவுக்குழுவுக்குச் செல்வது? கூட்டமைப்பும் எந்த அடிப்படையில் கலந்துகொள்ளும்? என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.