இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஆனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவம்பர் மாதத்தை விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக ஈழ தமிழர்கள் கடைபிடிப்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வேறு மாதத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என இளையராஜாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூறினர்.
இதற்கிடையில், அமெரிக்காவை புரட்டிப் போட்ட சாண்டி புயல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கனடாவிலும் தட்பவெப்பம் சாதகமாக இல்லை.
இதைத் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாம். இளையராஜா நேற்று முன்தினம் இரவு கனடா புறப்படுவதாக இருந்தார். அந்த பயணத்தை அவர் ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இளையராஜா தரப்பில் இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.