கிளிநொச்சி மலையாள புரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சுமார் 105 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ள படையினர், அதனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருவதுடன், பாரம்பரியமாக அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை அங்கு வரக் கூடாது எனக் கூறி விரட்டியடித்துள்ளதாக தெரியவருகிறது.
மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓரிரு தினங்களாக அங்கு செல்கின்றனர்.
ஆனால் அவர்களை வயல் நிலங்களுக்குச் செல்ல விடாமல் இராணுவம் துரத்தி அடித்து வருகின்றது. எங்களது சொந்த வயல் நிலங்களில் படையினர் குவிந்திருக்கின்றனர். எங்களையும் அவர்கள் விரட்டி அடித்தனர் என விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாம் இந்த நிலத்தில் 29 வருடங்களுக்கும் மேலாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றோம். நேற்று வந்த இராணுவம் இது உங்கள் நிலம் இல்லை என்று கூறி எங்களைக் கலைக்கிறது என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடமும் கால போக செய்கையில் இங்கு தமிழ் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். வழமைபோல தற்போதும் மழைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற போது விவசாயிகளுக்கு அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
எவரும் இனி இப் பகுதிக்கு வரக் கூடாது எனவும் இராணுவத்தினர் அச்சுறுத்தினர். எனவே உரிய அதிகாரிகள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி எமது நிலங்களை மீட்டுத் தரவேண்டும் என அந்த விவசாயி கூறியுள்ளார்.
இதேவேளை, தமது நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமல் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதை கிருஷ்ணபுரம் விவசாய சங்கத் தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். இது குறித்து தாம் கிராம சேவையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர் எனவும் இன்று பிரதேச செயலரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.