இசைஞானி இளையராஜா கனடாவில் நவம்பர் 3ம் தேதி நடத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலகத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.
வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவில் இசைஞானி இளையாராஜாவின் மாபெரும் இசைக் கச்சேரி ஒன்று அரங்கேற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் பிரச்சனை என்னவென்றால், நவம்பர் மாதம் முழுவதும் கனடா வாழ் தமிழர்கள் ஈழத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பல்வேறு வகையான நிகழ்வுகளில் பெரும் திரளாக கலந்து கொள்வர்.
அதுமட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நவம்பர் 2 தேதி வருகிறது. இதற்கும் கனடா தமிழர்கள் பெருந்திரளாக கூடி நினைவு கூர்வர். இவ்வாறு தமிழர்களின் பேரெழுச்சி மாதமாக ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களின் நினைவாக நவம்பர் மாதம் அனுசரிக்கப் படுகிறது.
இந்த எழுச்சியை இலங்கை அரசும் இந்திய அரசும் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை எப்படியாவது திசைத் திருப்ப வேண்டும், மழுங்கடிக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவை கனடாவில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணியில் தமிழக வர்த்தக சங்கம், தென்னிந்திய வர்த்தக சங்கம் மற்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருப்பதாக கனடா வாழ் தமிழர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
இதை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் பெயர் ட்ரினிடி ஈவன்ட்ஸ். இந்த நிகழ்ச்சிக்காக கனடாவில் இளையராஜாவும் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களும் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர் .
இந்த சந்திப்பில் ஒரு புதுமை என்னெவென்றால், இளையராஜாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட அதிக பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமத்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று இளையராஜாவிற்கு எடுத்துச் சொல்ல தமிழர் பிரதிநிதிகள் பலர் முயன்றும் இளையராஜாவை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த இயக்குனர் பாரதிராஜாவை அவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அவர்களது விளக்கத்தைக் கேட்ட பாரதிராஜா தான் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி விட்டாராம்.
இப்போது ஈழத் தமிழர்கள் கவலை எல்லாம், இந்த இசைக் கச்சேரி தமிழர்களின் ஈழ விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் என்பது தான் . இளைராஜாவை பெரிதும் நேசிக்கும் ஈழ மக்கள் இன்று இந்த இசை நிகழ்ச்சியால் அவரை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இளையராஜாவிற்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இளையராஜா இந்நிகழ்வை நவம்பர் மாதத்தில் நடத்தாமல் டிசம்பர் மாதமோ அல்லது அக்டோபர் மாதமோ நடத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர்.
தமிழகத்தில் இருந்தும் இளையராஜாவிற்கு இதற்கான கோரிக்கையை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வைத்துள்ளார். அமீர் முதலான இயக்குனர்கள் கூட இது தொடர்பாக இளையராஜாவை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தமிழக தமிழர்களும் கட்சிகளும், இயக்கங்களும் இளையராஜாவிற்கு இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இந்த இசை கச்சேரியை நவம்பர் மாதத்தில் நடத்தாதபடி செய்ய வேண்டும் என உலகத் தமிழர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.