இராமேஸ்வரத்திலிலுந்து 20 மைல் தொலைவில் இருப்பவர்களும் சரி சென்னையிலிருந்து 8 ஆயிரம் மைல் தொலைவில் ரொறன்ரோவில் இருப்பவர்களும் எமது உயிரிலும் மேலான உறவுகளே என்பதை உணர்த்தவே நான் எனது திரைப்பட குறுவட்டு வெளியீட்டை ரொறன்ரோவில் நடத்துகிறேன் என இயக்குனர் அமீர் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்தார்.
கனடாவில் முதன்முறையாக இடம்பெற்ற தமிழ்த் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட ஆதிபகவன் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா கனடியப் பல்கலாச்சார வானொலியின், வானொலி (CMR) அனுசரணையில் நேற்றைய தினம் சனிக்கிழமை ரொறன்றோ மாநகரில் இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து வந்திருந்த 28 கலையுலகைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட உள்ளுர் கலைஞர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற இப் பாடல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றில் கனடியக் தமிழ்க் கலைஞர் ஒருவரின் பாடலும் இடம் இடம்பெற்றிருந்தது .
கவிஞர் சிநேகன், இயக்குனர் கரு.பழணியப்பன், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் அமீரின் தமிழுணர்வுக்கு உரமேற்ற ஏறக்குறைய விழா தமிழுணர்வு விழாவாகவே இடம்பெற்றது. இவ்விழாவில் என்னை எனது உறவுகளிடமிருந்து பிரிக்க நிறையவே முயற்சிக்கிறார்கள், ஆனால் அது என்றுமே நடைபெறாது என பலத்த கைத்தட்டல்களிற்கு மத்தியில் அமீர் தெரிவித்தார்.
வழமையான சினிமாப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடைபெற்ற திரைப்படப் பாடல் குறுவட்டு வெளியீட்டில் அனைத்துப் பாடல்களுமே ஒலிக்கவிடப்பட்டு அப் பாடல்களிற்கு வேறு இன கலைஞர்கள் நடனமாடினர்.
கவிஞர் சிநேகன் உணர்வு பூர்வமான பல்லவியொன்றை மேடையில் பாடிக் காட்டினார் , இயக்குனர் கரு. பழணியப்பன் கடந்த சில தினங்களாகவே தான் இனிய, தூய தமிழை கேட்டு மகிழ்வதாகவும் இனித் தமிழ் சாகாது என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என கனடியத் தமிழர்களை புகழாரம் சூட்டினார்.
புலம்பெயர்ந்த தமிழ் இனம் எவ்வளவு விரைவாக உலகை ஆள முற்படுகிறது என்பதை தமிழ்ப் பெண் ஒருவரைப் பாராளுமன்ற உறுப்பிராக்கியதன் மூலம் கனடியத் தமிழர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள் என்று இயக்குனர் அமீர் நேயர்களுடனான கலந்துரையாடலில் குறிப்பிட்டிருநதார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.