இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பவற்றில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் புலிகளின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு லக்ஷ்மண் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதன் ஒரு கட்டமாக புலிகளுடன் பல சுற்றுப் பேச்சுகளும் இடம்பெற்றன. ஆயினும் இந்தப் பேச்சு வார்த்தைகளின்போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறி மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் புலிகள் ஈடுபட்டனர்.
ஆயினும் பலமான தலைமைத்துவம், மக்களின் ஆதரவு, சிறந்த திட்டமிடல் வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட பயிற்சி என்பவற்றின் மூலம், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளை இல்லாதொழித்தோம்.
இதன் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்திய அரசு, அனைவரையும் தற்போது மீள்குடியமர்த்திவிட்டது. படையினரிடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இறுதிப் போரின் போது தப்பிச் சென்ற சில புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து புலம்பெயர் மக்களைத் தவறான வழியில் தூண்டி விடுகின்றனர்.
குறிப்பாக இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பவற்றின் பின்னணியில் உள்ள இந்தப் புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.