சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக்கோரி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. "பல லட்சம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகி சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட நேரும் என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் எல்லைமீறி செயல்படுகிறது. மேலும், தமிழக மீனவர்கள்இலங்கைக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்" போன்றவற்றை முன் வைத்தே தூதரகத்தை மூடுமாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். அதன்படி ஆர்ப்பாட்டம் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சிலர் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் அனைவரும் இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர். பொலிசார் தடுத்தும் எவரும் நிற்கவில்லை. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.